“முட்டாள்தனமான யோசனை” - 'லைட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் அதிருப்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துவரும் மைதானங்களில் நிகழ்த்தப்படும் 'லைட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் அதிருப்தி தெரிவித்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல். டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இந்தப் போட்டியில் நெதர்லாந்து பந்துவீச்சாளர்களை சிதறடித்த மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக எடுக்கப்பட்ட சதம் இதுவாகும்.

இந்தப் போட்டியின் போது டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் 'லைட் ஷோ' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வீரர்கள் செஞ்சுரி அடிக்கும்போதும், அணி வெற்றிபெறும் போது என முக்கிய கட்டங்களில் மைதானத்தில் வண்ண விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டன. இரண்டு நிமிட அந்த 'லைட் ஷோ'வினால் மைதானமே முற்றிலுமாக வண்ணங்கள் நிறைந்ததாக காட்சியளித்தது. போட்டிகளை நேரில் பார்க்க வரும் ரசிகர்களை கவர்வதற்காக நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த 'லைட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஏற்பாட்டை க்ளென் மேக்ஸ்வெல் 'மோசமான யோசனை' என விமர்சித்துள்ளார். இதற்கான காரணங்களையும் கூறியுள்ள அவர், “பெர்த் ஸ்டேடியத்தில் நடந்த பிக் பாஷ் லீக்கின் போதும் இதுபோல் 'லைட் ஷோ' போடப்பட்டது. இந்த லைட் ஷோ நிகழ்த்தப்படும்போதெல்லாம் எனக்கு தலைவலி வருவதுபோல் உணர்கிறேன். இரண்டு நிமிடங்களுக்கு பின் எனது கண்களை சரிசெய்ய சிறிதுநேரம் ஆகிறது. இது விளையாட்டை பாதிக்கிறது. எனவே, என்னால் முடிந்தவரை 'லைட் ஷோ' போடப்படும் அதனை தவிர்க்க முயல்கிறேன். ரசிகர்களை கவர இது சிறந்தது. ஆனால், கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை இது முட்டாள்தனமான யோசனை என்று நான் நினைக்கிறேன்” எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் மேக்ஸ்வெல்.

மேக்ஸ்வெல் அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், வார்னர் இதே விஷயத்தில் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள டேவிட் வார்னர் “எனக்கு இந்த லைட் ஷோ மிகவும் பிடித்திருந்தது. உண்மையில் நல்ல ஒரு சூழல் அது. எல்லாமே ரசிகர்களுக்காக தான். ரசிகர்கள் இல்லாமல், நாங்கள் விரும்புவதை செய்ய முடியாது” என லைட் ஷோ நிகழ்ச்சியை வரவேற்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE