தென் ஆப்பிரிக்க அணியின் தீவிரத்துக்கு பதிலளிக்குமா இந்திய அணி: 2-வது டெஸ்ட் சவால் நாளை முதல்

By ராமு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தொடர் வழக்கம் போலான ஒரு இந்திய வெளிநாட்டுத் தொடராக முடியுமா என்ற பார்வை முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு தலைதூக்கும் நேரத்தில் தென் ஆப்பிரிக்காவின் கோட்டை ஆன செஞ்சூரியனில் நாளை (சனி, 13-1-2018) 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்தியாவில் வாங்கிய உதைகளுக்கு பழி வாங்கும் தொடராகவே இது அங்கு பார்க்கப்படுகிறது. அதனால்தான் மென்மையான ஸ்லெட்ஜிங்கும் அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது. புஜாரா ஆடும்போது, ‘எப்படி ஆடினாலும் பந்து சிலி மிட் ஆஃபைத் தாண்டவில்லையே’ என்றும், அஸ்வின் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய போது, ‘பவுலர்னும் சொல்ல முடியாது பேட்ஸ்மென்னும் சொல்ல முடியாது’ என்று மென்மை ரக ஸ்லெட்ஜிங் நடந்ததாக கிரிக் இன்போவில் குறிப்பிடப்பட்டதும் தென் ஆப்பிரிக்காவின் தீவிரத்தைப் பறைசாற்றுவதாகவே உள்ளது.

செஞ்சூரியன் மைதான வரலாறு அதன் பேருக்கேற்றார் போல் துணைக்கண்ட வீரர்களுக்கு ‘செஞ்சுரி’ மைதானம் அல்ல, ஒவ்வொரு துணைக்கண்ட அணியும், இந்தியா உட்பட, இங்கு இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளதே வரலாறு.

ரஹானே ஆடுவாரா மாட்டாரா என்பதற்கு விராட் கோலி கமல்ஹாசன் பாணியில் பதில் கூறியுள்ளார், அதனால் நாளை போட்டி தொடங்கும் முன்புதான் தெரியும். அஸ்வின் இருக்க மாட்டார் என்று ‘பட்சி’ கூறுகிறது. இசாந்த் அல்லது உமேஷ் யாதவ் உள்ளே வர வாய்ப்புள்ளது. அனைவரும் பார்த்திவ் படேல் பேட்டிங்குக்குத் தேவை என்று கூறுகின்றனர். சஹா போன போட்டியில் 10 தென் ஆப்பிரிக்க வீரர்களை அவுட் செய்து தோனியை முறியடித்துள்ளார். விக்கெட் கீப்பரிடம் பேட்டிங்கை ஒரு பங்களிப்பாகவே எதிர்பார்க்க வேண்டும். அவரைப் போய் சதம் எடுக்க வேண்டும் என்றால் அது சரியாகாது.

இத்தகைய பிட்ச்களில் குல்தீப் யாதவ் போன்ற புதிர் வீச்சாளர்கள் உதவுவார்கள். ஆனால் அவரைத் தேர்வு செய்யவில்லை. ராகுல், விஜய் இறக்கப்படலாம், அல்லது விஜய் திடீரென ‘உடல் நலம்’ இல்லாமல் போனால் ஷிகர் தவண் நீடிக்கவே வாய்ப்பு. அல்லது பார்த்திவ் படேல் வரலாம்.

செஞ்சூரியன் பிட்ச் பேட்டிங்குக்கு கடினமான பிட்ச்தான். ஆனாலும் புள்ளி விவரங்களின் படி இங்கு 22 டெஸ்ட் போட்டிகளில் 39 சதங்கள், அதில் 2 இரட்டைச் சதங்களும் அடிக்கப்பட்டுள்ளன, எனவே if there is a will there is a way.

ஸ்டெய்ன் இல்லாதது தென் ஆப்பிரிக்காவுக்கு மறைமுகமான ஆசீர்வாதமாகத்தான் இருக்கும். பிலாண்டர், ரபாடா, மோர்னி மோர்கெல், வேகப்பந்து வீச்சு அதிரடி ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் நிச்சயம் ஒரு அதிரடிக் கூட்டணியாக இருக்கும். அல்லது துவான் ஆலிவியர் என்ற வேகப்பந்து வீச்சு தெரிவாக உள்ளே வரலாம், இவர்தான் வங்கதேசக் கேப்டன் முஷ்பிகுர் ரஹீமின் காதோரம் (கிருதா உட்பட) பெயர்த்தவர்.

எப்போதுமே அயல்நாட்டுப் பிட்ச்களில் குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் ஏதோ ஒரு பந்து நம்மை விழுங்கி விடும், அதற்குள் ரன்களை அடிக்க வேண்டும். அதாவது விரைவு கதியில் ரன் எடுக்க வேண்டும். மே.இ.தீவுகளின் டெஸ்மன்ட் ஹைன்ஸ் என்பவர் ஆடுவது போல் ஆட வேண்டும், அவர் என்ன செய்வாரென்றால் ஒரு ஓவர் முழுக்க அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப் பந்தை ஆடாமல் விட்டு, அடுத்த ஓவரில் அதே மாதிரியான பந்தில் ஒரு 3 பந்தை ஆஃப் திசையிலும் ஏன் லெக் திசையிலும் கூட 3 பவுண்டரிகள் அடிப்பார். இப்போது பிலாண்டரை அவர் எப்படி ஆடுவார் என்றால், அவரது ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்துகளை ஆடாமல் விட்டுக் கொண்டே இருப்பார், பிலாண்டர் உடனே ஒரு இன்ஸ்விங்கரை வீசுவார், ஆனால் அந்தக் குறிப்பிட்ட பந்தை கிட்டத்தட்ட மண்டிப்போட்டுக் கொண்டு ஒரு கிராஸ் பேட் மிட்விக்கெட் பவுண்டரி அடிப்பார், இது பவுலர்களைக் குழப்பி விடும், அதுபோல்தான் பிலாண்டரின் உள்ளே வரும் பந்துகளை வெளுத்துக் கட்டினால் அவரது விக்கெட் வாய்ப்புகள் குறையும். ஆனால் இதற்கு ஒரு தீவிர மன நிலை வேண்டும், கட்டம்கட்டி அவரை மட்டும் ஒருவர் பதம் பார்க்க வேண்டும். அல்லது அனைவரும் அவரது இன்ஸ்விங்கர்களை பவுண்டரிக்கு விரட்ட வேண்டும்.

கடந்த டெஸ்ட் போட்டியின் தவறுகளைத் திருத்திக் கொள்கிறோம் பேர்வழி என்று ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளையும் ஆடாமல் விட்டு, ஷார்ட் பிட்ச் பந்துகளிலும் ரன் எடுக்காமல் விட்டால் பிறகு ஒரு பந்து நம்மை விழுங்கும்போது 15 ரன்கள்தான் அடித்திருப்போம்.

விராட் கோலி தன் பேட்டியில் intent பற்றி அருமையாகப் பேசியுள்ளார், இதனை அவரே செயல்படுத்தி செஞ்சூரியனில் ஒரு கடினமான சதத்தை எடுக்க முடிந்தது என்றால் நிச்சயம் நம் பந்து வீச்சு நமக்கு ஒரு அரிய தென் ஆப்பிரிக்க வெற்றியைப் பெற்றுத்தர வாய்ப்புள்ளது.

செஞ்சூரியனில் 22 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க 17-ல் வெற்றி கண்டுள்ளது. 2000-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராகவும் 2014-ல் ஆஸ்திரெலியாவுக்கு எதிராகவும் தென் ஆப்பிரிக்கா இங்கு தோற்றுள்ளது.

2010-11 தொடரில் இந்தியா இங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 136 ரன்களுக்குச் சுருண்டது. சச்சின் டெண்டுல்கர் 34 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் விளாசி ஸ்டெய்ன் பந்தில் எல்.பி.ஆனார். தோனி 50 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 33 ரன்கள் எடுத்து மோர்கெலிடம் எல்.பி.ஆனார். ஹர்பஜன் சிங் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 25 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆம்லா (140), காலிஸ் (201 நாட் அவுட்), டிவில்லியர்ஸ் 112 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 129 ரன்களுடன் 620/4 டிக்ளேர் செய்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் கம்பீர் படுதைரியமாக ஆடினார், தாடை, வயிறு, பின் மண்டை, ஹெல்மெட் என்று அடிவாங்கி 80 ரன்கள் எடுத்தார். சேவாக் 79 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்தார். சச்சின் டெண்டுல்கர் 111 ரன்களை எடுத்து சதம் கண்டார். ’தல’ கேப்டன் தோனி 106 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் விளாசினார். 459 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்களில் இந்தியா தோல்வி கண்டது. 2-வது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மென்கள் ஆடிய தைரியமும் தன்னம்பிக்கையும்தான் நாளைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸ் தூண்டுகோலாக அமைய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்