தரம்சாலா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி யில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
இந்த ஆட்டம் இமாச்சல பிரதேசத்திலுள்ள தரம்சாலா மைதானத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. டாஸை
வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, நியூஸிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ், மொகமது ஷமி ஆகியோர் அணிக்குள் கொண்டு வரப்பட்டனர். நியூஸிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தொடக்க ஆட்டக்காரர்களாக டேவன் கான்வேவும், வில் யங்கும் களமிறங்கினர். டேவன் கான்வே ரன் கணக்கை தொடங்காமலேயே, மொகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வில் யங் 27 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமி பந்துவீச்சில் போல்டானார். இதனால் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 19 ரன் கள் என்ற நிலையில் இருந்தது.
இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். இருவரும் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். குறிப்பாக குல்தீப் யாதவ் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினர். அணியின் ஸ்கோர் 178-ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. 87 பந்து களில் 75 ரன்கள் சேர்த்த நிலையில் ஷமி பந்தில், ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த கேப்டன் டாம் லேதம் 5 ரன்களில் குல்தீப் பந்தில் வீழ்ந்தார். சிறிதுநேரம் களத்தில் நீடித்த கிளென் பிலிப்ஸ் 23 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். சாப்மேனை 6 ரன்களில் வெளியேற்றினார் ஜஸ்பிரீத் பும்ரா. மிட்செல் சான்ட்னர் ஒரு ரன்னிலும், மேட் ஹென்றி ரன் எடுக்காமலும் மொகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் மறுபுறம் டேரில் மிட்செல் நிலைத்து ஆடி சதம் விளாசினார். அவர் 127 பந்துகளில் 130 ரன்கள் விளாசிய நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் கடைசி பந்தில் லாக்கி பெர்குசன் ரன்-அவுட்டானார். 50 ஓவர்களில் அந்த அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் மொகமது ஷமி 54 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை சாய்த்தார்.
இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் 2 முறை 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஷமி செய்துள்ளார். இதற்கு முன்பு கபில்தேவ், வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங், ஆசிஷ் நெஹ்ரா, யுவராஜ் ஆகியோர் தலா ஒரு முறை 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தனர். இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும், பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடத் தொடங்கியது. விராட் கோலி,
ரோஹித்தின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 274 ரன்கள் எடுத்து வெற்றி கண்
டது. ரோஹித் 46, ஷுப்மன் 26, ஸ்ரேயஸ் 33, விராட் கோலி 95, கே.எல்.ராகுல் 27, சூர்யகுமார் யாதவ் 2 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 39, மொகமது ஷமி ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து இந்திய அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
குறைந்த வயதில் 2000: நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் ஷுப்மன் கில், ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன்மூலம் குறைந்த வயதில் 2 ஆயிரம் ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் 5-வது இடத்தில் ஷுப்மன் கில் (24 ஆண்டு, 44 நாட்கள்) உள்ளார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் (20 ஆண்டு, 35 நாட்கள்), 2-வது இடத்தில் யுவராஜ் சிங் (22 ஆண்டு, 51 நாட்கள்), 3-வது இடத்தில் விராட் கோலி (22 ஆண்டு, 215 நாட்கள்), 4-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா (23 ஆண்டு, 45 நாட்கள்) உள்ளனர்.
மொகமது ஷமி 3-வது இடம்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மொகமது ஷமி 3-வது இடத்தில் உள்ளார். அவர் தற்போது 36 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த வரிசையில் முதலிடத்தில் ஜாகீர் கானும் (44 விக்கெட்கள்), 2-வது இடத்தில் ஜவகல் ஸ்ரீநாத்தும், (44 விக்கெட்கள்), 4-வது இடத்தில் அனில் கும்ப்ளேவும் (31 விக்கெட்கள்), 5-வது இடத்தில் ஜஸ்பிரீத் பும்ராவும் (29 விக்கெட்கள்), 6-வது இடத்தில் கபில் தேவும் (28 விக்கெட்கள்) உள்ளனர். மேலும் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் மொகமது ஷமி 3-வது இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் 6 முறை 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இம்ரான் தாஹிர், 5 முறை 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி 2-வது இடத்தில் இருக்கிறார்.
அதிக சிக்ஸர்கள்: ஓராண்டில் அதிக சிக்ஸர்களை விளாசியவர்கள் வரிசையில் ரோஹித் சர்மா 3-வது இடத்தில் உள்ளார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் அவர்2023-ம் ஆண்டில்மொத்தம் 53 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் 58 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர் 2015-ல் இந்தச் சாதனையைச் செய்திருந்தார். 2-வது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் 56 சிக்ஸர்களுடன் (2019-ம் ஆண்டு) 2-வது இடத்தில் உள்ளார்.
மூடுபனியால் ஆட்டம் பாதிப்பு: இந்திய அணி பேட்டிங் செய்தபோது 16-வது ஓவரின் இடையே மூடுபனி மைதானத்தை சூழ்ந்ததன் காரணமாக ஆட்டம் 10 நிமிட நேரம் தடைபட்டது. பின்னர் பனி விலகியதையடுத்து ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
> உலகக் கோப்பை போட்டிகளில் நான்காவதாக களமிறங்கி இந்தியாவுக்கு எதிராக சதமடித்தவர்கள் வரிசையில் டேரில் மிட்செல் இணைந்தார். இதற்கு முன்பு உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக நான்காவதாக களமிறங்கி இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனா 103 ரன்களும் (2011), ஜிம்பாப்வே வீரர் பிரண்டன் டெய்லர் 138 ரன்களும் (2015), இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 113 ரன்களும் (2019) எடுத்திருந்தனர்.
> குறைந்த போட்டிகளில் 5 சதங்களை விளாசிய நியூஸிலாந்து வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார் டேரில் மிட்செல். அவர் 30 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5 சதங்களை விளாசியுள்ளார். இந்த வரிசையில் முதலிடத்தில் டேவன் கான்வே (22 போட்டிகள்) முதல் இடத்திலும், கேன் வில்லியம்சன் (56 போட்டிகள்) 3-வது இடத்திலும், நாதன் ஆஸ்லே (64 போட்டிகள்) 4-வது இடத்திலும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago