இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: வெற்றி பெறும் அணி அரை இறுதி வாய்ப்பை நெருங்கும்

By செய்திப்பிரிவு

தரம்சாலா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகின்றன. இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் நியூஸிலாந்து முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது 10 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக்கொள்ளும்.

இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங்கில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறந்தபார்மில் உள்ளனர். ஸ்ரேயஸ் ஐயரும் வலு சேர்ப்பவராக திகழ்கிறார். பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ் ஆகியோர் தொடக்க ஓவர்களில் அழுத்தம் கொடுப்பவர்களாக உள்ளனர்.

நடு ஓவர்களில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது சுழற்பந்து வீச்சால் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் தேவையான தருணங்களில் விக்கெட் கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுப்பவர்களாகவும் திகழ்கின்றனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கமாட்டார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர், பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரும் 29-ம் தேதிஇங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிலக்னோவில் மோதுகிறது. இந்த ஆட்டத்துக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதியை அடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா இல்லாதது நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் சமநிலையை பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஏனெனில் அவருக்கு நிகரான மாற்று வீரர் அணியில் இல்லை. அநேகமாக பாண்டியா இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படக்கூடும். ஒருவேளைகூடுதல் பேட்ஸ்மேன் தேவை என அணி நிர்வாகம் கருதினால் சூர்யகுமார் யாதவ் களமிறங்கக்கூடும்.

இது ஒருபுறம் இருக்க இன்றைய போட்டி நடைபெறும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால்ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக மொகமது ஷமி களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவரது வேகம், ஸ்விங் ஆகியவை தரம்சாலா ஆடுகளத்துக்கு தகுந்தவாறு இருக்கக்கூடும். மேலும் நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த காலங்களில் ஷமி சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

உலகக் கோப்பையில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டங்களிலும், நியூஸிலாந்து 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. கடைசியாக இரு அணிகளும் கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதி இருந்தன.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சி செய்யக்கூடும். உலகக் கோப்பை தொடர்களில் இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக நியூஸிலாந்து அணி இதற்கு முன்னர் வெற்றி கண்டது இல்லை. 1987-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணி இரு முறை இந்தியாவுக்கு எதிராக விளையாடி தோல்வி அடைந்திருந்தது.

எனினும் இம்முறை நியூஸிலாந்து அணி சமபலத்துடன் உள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடாத நிலையில் டேவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோர் பேட்டிங்கில் பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர். டாம்லேதம், கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

அதேபோன்று டிம் சவுதி காயம் காரணமாக வெளியே அமரவைக்கப்பட்டுள்ள போதிலும் பந்து வீச்சு வலுவாக காணப்படுகிறது. மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன் ஆகியோர் தங்களது சீரான வேகத்தால் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். டிரெண்ட் போல்ட் சிறந்த பார்மில் இல்லாவிட்டாலும் உரிய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

சுழற்பந்து வீச்சில் 11 விக்கெட்கள் வேட்டையாடி உள்ள மிட்செல் சாண்ட்னர், நடு ஓவர்களில் ரன் குவிப்வை வெகுவாக கட்டுப்படுத்துபவராக திகழ்கிறார். அவருடன் ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் சுழலில் கை கொடுக்கின்றனர். நியூஸிலாந்து அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சு துறையும் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

‘பந்துக்கும் மட்டைக்குமான மோதல்’: நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறும்போது, “இந்தியா அற்புதமான அணி. அவர்கள் நீண்ட காலமாக சிறந்தகிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். ஐசிசி தொடர்களில் மட்டுமல்ல, இருதரப்புதொடர்களிலும் நாங்கள் இந்தியாவுக்குஎதிராக சில சிறந்த போட்டிகளைக் விளையாடி உள்ளோம். ஒரு குழுவாக சூழ்நிலையை தகவமைத்துக்கொள்வதுதான் மிகவும் முக்கியம்.

நாங்கள் அதை முடிந்தவரை விரைவாக செய்ய முயற்சி செய்கிறோம். இரு அணிகளுமே பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனால் இந்த ஆட்டம் பந்துக்கும் மட்டைக்கும் இடையிலான சிறந்த மோதலாக இருக்கும். டிம் சவுதி முழுஉடற்தகுதியுடன் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE