ODI WC 2023 | ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் யார்? - ரோகித்துக்கு ஹர்பஜன் சிங் யோசனை

By செய்திப்பிரிவு

புனே: புனேவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின்போது இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்பாராத விதமாக இடது கணுக்காலில் காயம் ஏற்பட மைதானத்திலேயே வலியில் சுருண்டு விழுந்தார். அணியின் பிசியோ உடனடியாக சோதித்துப் பார்த்தநிலையில், தொடர்ந்து பந்துவீச முடியாத பாண்டியா ஆட்டத்தில் இருந்தே வெளியேறினார்.

காயத்தால் பாதிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, நாளை (அக்.22) தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக திகழ்கிறார் ஹர்திக். இதுவரை நடந்த 3 போட்டிகளில் அவருக்கு பெரிதாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஆறாவது பந்துவீச்சாளராக இந்த 3 போட்டிகளில் 16 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் அவர் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறாத நிலையில் அவருக்குப் பதிலாக யார் களமிறக்கப்படுவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், ஹர்திக் பாண்டியா இடத்துக்கு சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன் களமிறக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசிய ஹர்பஜன் சிங், "ஹர்திக் பாண்டியா முழு உடல்தகுதியுடன் இல்லை என்றால் அது இந்திய அணிக்கு கவலைகொள்ளக் கூடிய விஷயமே. இதுவரை விளையாடிய போட்டிகளில் நல்ல பங்களிப்பை பாண்டியா அளித்துள்ளார். அவர் இல்லாத பட்சத்தில், அவருக்குப் பதில் இஷான் கிஷான் அல்லது சூர்யகுமார் யாதவை களமிறக்க வேண்டும். இருவருமே பேட்டிங்கில் கைகொடுக்க கூடியவர்கள்.

இதுவரை ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பெற்றிருந்தார். அவரின் ஆல் ரவுண்டர் திறமை அணியில் இடம்கிடைக்க காரணமாக இருந்தது. ஹர்திக் இல்லாத பட்சத்தில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமியை சேர்க்க வேண்டும். ஷமி, முழுமையாக 10 ஓவர் வீசக்கூடிய பவுலர். பேட்டிங்கில் இஷான் அல்லது சூர்யகுமாரும், பவுலிங்கில் ஷமியையும் சேர்க்க வேண்டும்." இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE