''மற்ற அணிகளை விட, இந்தியாவுக்கு அழுத்தம் அதிகம்'' - நியூஸி. வீரர் ட்ரென்ட் போல்ட்

By செய்திப்பிரிவு

தர்மசாலா: நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியே சந்திக்காத அணிகள் இந்தியா மற்றும் நியூஸிலாந்து. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளும் நான்கிலும் வெற்றிபெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் நியூஸிலாந்து முதலிடத்தையும், இந்தியா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் நாளை (அக்.22) தர்மசாலா மைதானத்தில் மோதவுள்ளன.

இதுவரை தோல்வியே சந்திக்காத அணிகள் என்பதாலும், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சமபலமிக்க அணிகள் என்பதாலும் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, போட்டிக்கு முன்னதாக பேசிய நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட், "இந்திய அணி மைதானத்தின் நிலைமைகளை நன்கு அறிந்திருந்தாலும், உள்ளூரில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதால் கூடுதல் அழுத்தத்தில் இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ட்ரென்ட் போல்ட், "நிச்சயம் இந்தியா மிகச்சிறந்த அணி. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் நல்ல வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். நடப்பு தொடரில், நல்ல விளையாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் நியூஸிலாந்தை பொறுத்தவரை விளையாட்டை அனுபவித்து விளையாடி வருகிற ஒரு அணி. நேர்மறையான அணுகுமுறையும், உத்திகளை கடைப்பிடிப்பதும், விளையாட்டில் தீவிரமாக கவனம் செலுத்துவதும்தான் இப்போது எங்களின் நோக்கம். இவற்றில் எதுவும் எங்களிடம் இருந்து மாறாது மற்றும் வெற்றிகரமாக இதனை கடைபிடிப்போம்.

இந்திய அணி கள நிலவரங்களை நன்கு அறிந்திருந்தாலும், உள்ளூரில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதால் கூடுதல் அழுத்தத்தில் இருக்கும். சொல்லப்போனால், மற்ற அணிகளின் பேட்ஸ்மேன் அல்லது மற்ற பந்துவீச்சாளர்களுக்கு இல்லாத அழுத்தம் அவர்களுக்கு இருக்கும். இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது என்பது பெரிய விஷயம்தான். எனினும், இந்திய ரசிகர்கள் எங்களுக்கும் ஆதரவாக இருப்பார்கள்.

இரு அணிகளும் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. இதனால் நாளைய போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE