“என்னை பாகிஸ்தானி என அழைக்காதீர்கள்’’ - வக்கார் யூனிஸ் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: “என்னை பாகிஸ்தானியர் என்று அழைக்காதீர்கள். நான் பாதி ஆஸ்திரேலியன்" எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 18-வது லீக் போட்டியில் பாகிஸ்தானை 62 ரன்களில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 367 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் மார்ஷ் இணைந்து 259 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மிட்செல் மார்ஷ், 121 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர், 124 பந்துகளில் 163 ரன்கள் எடுத்தார்.

368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 134 ரன்களுக்கு இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதனை ஆஸ்திரேலியா தகர்த்தது. அதன் பின்னர் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். கேப்டன் பாபர் அஸம் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். தொடர்ந்து பின்னர் பாகிஸ்தான் அணி முறையான பார்ட்னர்ஷிப் அமைக்க தவறியது. இதனால், 45.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 305 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். இதன் மூலம் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 10 ஓவர்கள் வீசிய ஸம்பா, 53 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பெறும் இரண்டாவது தோல்வி இதுவாகும். ஏற்கனவே, இந்தியா உடன் தோற்றிருந்தது. இந்தப் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்களான ஷேன் வாட்சன், ஆரோன் பின்ச் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் ஆகியோர் வர்ணனை செய்தனர். அப்போது ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற உற்சாகத்தில் பேசிக்கொண்டிருந்த பின்ச் மற்றும் வாட்சன் இருவரும் பாகிஸ்தான் குறித்து பேசினார்.

அப்போது, “என்னை பாகிஸ்தானியர் என்று அழைக்காதீர்கள். நான் பாதி ஆஸ்திரேலியன். எனவே என்னை பாகிஸ்தானியர் என்று மட்டும் முத்திரை குத்தாதீர்கள்" என்று கூறி திகைப்பூட்டினார் வக்கார் யூனிஸ். இதனால் வர்ணனையில் சில நிமிடங்கள் சிரிப்பலை எழுந்தது. வாட்சனும், பின்ச்சும் வக்கார் யூனிஸ் பேச்சைக் கேட்டு சிரித்தனர்.

பாகிஸ்தானின் தொடர் தோல்விகளால் வக்கார் யூனிஸ் இப்படி பேசியதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. பாகிஸ்தானின் கிரிக்கெட் பாரம்பரியத்தின் அடையாளமாக வக்காரை அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கருதிவரும் வேளையில் அவர் இப்படி பேசியிருக்க கூடாது என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால் அவர் இப்படி சொன்னதுக்கு மற்றொரு காரணமும் உண்டு. வக்கார் யூனிஸ் பிறப்பால் பாகிஸ்தானி என்றாலும், தற்போது அவர் தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் வசித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மனைவி ஃபார்யல் பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். ஃபார்யல் அங்கு மருத்துவராக பணிபுரிகிறார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூன்று குழந்தைகளுடன் வக்கார் யூனிஸ் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவருவதை அடுத்தே இப்படி ஒரு கருத்தை அவர் கூறினார் எனச் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE