விராட் கோலியின் 48வது சதம் - முன்னாள் வீரர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

By செய்திப்பிரிவு

புனே: "சதம் அடிப்பதைவிட, அணிக்கே முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என விராட் கோலியின் 48வது சதம் குறித்து இந்திய வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசி இருந்தார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கோலி பதிவு செய்த இந்த சதத்துடன் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்களை பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 78-வது சதங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் இறுதிக்கட்டத்தில் அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட, கோலி சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது. 97 ரன்களில் இருந்த விராட் கோலி, சதம் அடிக்க வேண்டும் என முனைப்பாக இருந்தார். அதற்காக நான் ஸ்ட்ரைக்கர் என்டில் இருந்த கேஎல் ராகுல் பேட்டிங் செய்யும் நிலைவந்தபோதும் அதனை மறுத்த அவர் கோலிக்கு சதம் அடிக்க வாய்ப்பை ஏற்படுத்தினார். இறுதியில் சிக்ஸர் அடித்து சதத்தை எட்டினார் கோலி. 70 ரன்கள் எடுத்த பிறகே சதம் அடிக்க மும்முரம் காட்டிய கோலி, இதற்காக சிங்கிள்ஸ் எடுப்பத்தை தவிர்த்து பவுண்டர்களில் கவனம் செலுத்தினார். ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக்கொள்ள ஓவர்களில் கடைசி பந்துகளில் மட்டும் சிங்கிள்ஸ் எடுத்தார்.

போட்டிக்கு பின் பேசிய கோலி, "உலகக் கோப்பை அரங்கில் அரை சதம் பதிவு செய்துள்ளேன். ஆனால், அதனை சதமாக என்னால் மாற்ற முடியவில்லை. இந்த முறை அதை சரியாக செய்துள்ளேன்." என்றார். இதனிடையே, சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி ஸ்லோவாக ஆடியதாக முன்னாள் வீரர்கள் மத்தியில் சலசலப்பு உண்டாகியுள்ளது. சிலர் கோலியை ஆதரித்தும், சிலர் அவரின் செயலை விமர்சித்தும் வருகின்றனர்.

இந்திய வீரர் புஜாரா இதுதொடர்பாக பேசுகையில், "கோலி சதத்தை எட்ட வேண்டும் என்பதில் எனக்கும் நிறையவே ஆசை. ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் வைக்க வேண்டும். உலகக் கோப்பை போன்ற தொடர்களில் போட்டிகளை முடிந்தளவு விரைவாக முடிக்க வேண்டும். அப்போதுதான் நெட் ரன் ரேட் அடிப்படையில் நாம் முதலிடம் வகிக்க முடியும். ஒருவேளை பின்னாள் நெட் ரன் ரேட்டுக்கு போராடும் நிலை வந்தால், அப்போது, இதுமாதிரி ஸ்லோவாக ஆடியதை நினைத்து, 'அன்றே விரைவாக ரன் அடித்து இருக்கலாம்' எனச் சொல்ல முடியாது.

ஒவ்வொரு வீரரும் அணிக்காக தியாகங்கள் செய்ய வேண்டும் என்று நான் உணர்கிறேன். நீங்கள் அணியை தான் முதலில் பார்க்க வேண்டும். அணிக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும். அதுதான் எனது தனிப்பட்ட கருத்து. உங்களது தனிப்பட்ட சாதனைக்காக அணியை வஞ்சிக்க கூடாது. சதம் அடித்தால் அடுத்த ஆட்டத்தில் உதவும் என்பது சில வீரர்களின் எண்ணமாக உள்ளது. அது வீரர்களின் மனநிலையை பொறுத்தது" என விரிவாக பேசியுள்ளார்.

கோலிக்கு ஸ்ரீகாந்த் ஆதரவு: முன்னதாக இதே விஷயத்தில் கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேசியுளளார். அவர் பேசுகையில், "சதம் அடிக்க விராட் கோலி ஆர்வம் காட்டியதில் என்ன தவறு உள்ளது. கிரிக்கெட் பற்றி புரிதல் இல்லாதவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். உலகக் கோப்பை தொடர்களில் சதம் அடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். எனவே, இதில் தவறு கிடையாது. கோலி சதம் அடிக்க துணையாக நின்ற கேஎல் ராகுலுக்கு எனது பாராட்டுக்கள். கோலி நிறைய சதங்களுக்கு சொந்தக்காரர் ஆக வேண்டும்." இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் முன்னாள் வீரர்கள் மேத்யூ ஹைடன் போன்றோரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் கோலியின் 48வது சதம் சர்ச்சைகளை எதிர்கொண்டுவருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE