ODI WC 2023 | நியூஸி.க்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லை: பிசிசிஐ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஞாயிற்றுக்கிழமை (அக்.22) தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

புனேவில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 256 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு விராட் கோலி சதம் அடித்து உதவ, வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி, உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் 9வது ஓவரை வீசும்போது இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா எதிர்பாராத விதமாக இடது கணுக்காலில் காயம் ஏற்பட மைதானத்திலேயே வலியில் சுருண்டு விழுந்தார். அணியின் பிசியோ உடனடியாக சோதித்து பார்த்தநிலையில், தொடர்ந்து பந்துவீச முடியாத பாண்டியா ஆட்டத்தில் இருந்தே வெளியேறினார்.

இதனிடையே, அவரின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அப்டேட் வெளியிட்டுள்ளது. பிசிசிஐயின் அறிவிப்பில், "வங்கதேச போட்டியின்போது ஹர்திக் பாண்டியாவுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதனடிப்படையில், ஓய்வெடுக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ள ஹர்திக் பாண்டியா நியூஸிலாந்துக்கு எதிரான தர்மசாலா போட்டியில் இந்திய அணியில் இணையமாட்டார். மாறாக, லக்னோவில் நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக திகழ்கிறார் ஹர்திக். அவரின் ஆல்ரவுண்டர் பாத்திரம் இந்திய அணிக்கு பெரிதும் உதவி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் அவருக்கு பெரிதாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஆறாவது பந்துவீச்சாளராக இந்த 3 போட்டிகளில் 16 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஷர்துல் தாகூர் பிரதான பந்துவீச்சாளராக இருந்தாலும், அவரை விட ஹர்திக்கே சிறப்பாக செயல்பட்டுவருகிறார். இதனால் அவர் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறாத நிலையில் அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோரில் யாரேனும் ஒருவர் களமிறங்க வாய்ப்புள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE