ODI WC 2023 | காயத்தால் மைதானத்தில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா - பிசிசிஐ அப்டேட் என்ன?

By செய்திப்பிரிவு

புனே: வங்கதேசத்துக்கு எதிராக புனேவில் நடந்துவரும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பந்துவீச முடியாமல் வெளியேறினார்.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது நான்காவது ஆட்டத்தில் இன்று வங்கதேசத்தை எதிர்த்து புனேயில் உள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க (எம்சிஏ) மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்போது வரை 4 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் எடுத்து விளையாடி வரும் அந்த அணிக்கு ஓப்பனிங் வீரர்கள் தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் அரைசதம் அடித்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

இந்தப் போட்டியில் இன்னிங்ஸின் 9வது ஓவரை வீசினார் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா. இந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் லிட்டன் தாஸ் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். 3வது பந்தை வீசும்போது எதிர்பாராத விதமாக காலில் காயம் ஏற்பட வலியில் சுருண்டு மைதானத்தில் விழுந்தார். அணியின் பிசியோ உடனடியாக ஓடி வந்து அவரை சோதித்து பார்த்தார். இதன்பின் பாண்டியாவால் தொடர்ந்து பந்துவீச முடியவில்லை. இதையடுத்து அவர் ஆட்டத்தில் வெளியேறினார்.

பாண்டியாவுக்கு பதிலாக மீதமுள்ள பந்துகளை விராட் கோலி வீசினார். இதனிடையே, பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் அடைந்திருப்பதாகவும், அவருக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் மட்டுமல்ல, அடுத்தடுத்த ஆட்டங்களிலும் ஹர்திக் பாண்டியா விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக திகழ்கிறார் ஹர்திக். அவரின் ஆல்ரவுண்டர் பாத்திரம் இந்திய அணிக்கு பெரிதும் உதவி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் அவருக்கு பெரிதாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஆறாவது பந்துவீச்சாளராக இந்த 3 போட்டிகளில் 16 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஷர்துல் தாகூர் பிரதான பந்துவீச்சாளராக இருந்தாலும், அவரை விட ஹர்திக்கே சிறப்பாக செயல்பட்டுவருகிறார். இதனால் அவர் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனினும், அவர் மீதமுள்ள ஆட்டங்களில் பங்கேற்பது அவருக்கு எடுக்கப்படும் ஸ்கேனை பொறுத்தே அமையும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE