ODI WC 2023 | உலகக் கோப்பையில் ஓரம்கட்டப்படும் முகமது ஷமி: பின்னணி என்ன?

By ஆர்.முத்துக்குமார்

2023 ஐசிசி உலகக் கோப்பையில் இன்று புனேயில் நடைபெறும் இந்தியா - வங்கதேசப் போட்டி 17வது ஆட்டமாகும். இந்தியா விளையாடும் 4வது போட்டியாகும். ஆனால் இன்னும் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தையும் அதேநேரம் கேள்வியையும் எழுப்புகிறது. ‘ஷமி வேண்டுமென்றே ஓரம்கட்டப்படுகிறாரா?’ என்ற கேள்வியே அது.

ஷமிக்கு பதில் ஷர்துல் தாக்கூர் அணியில் தேர்வு செய்யப்படுகிறார். ஆனால், அவரை முழுவதுமாக பயன்படுத்துவதும் இல்லை என்பதால், ஷமி திட்டமிட்டு ஓரம்கட்டப்படுகிறாரா என்றும், அவரின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் வாழ்க்கை முற்றுப்பெறப்போகிறதா என்ற கேள்வி எழுகிறது. அப்படியே மெல்ல மெல்ல டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையும்தான். ஏனெனில் 2020 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஷமி ஒரே ஓவரில் 20 ரன்கள் கொடுத்தார் என்று அவர் மீது ரசிகர்களில் ஒருபிரிவினர் துவேஷத்துடன் அவரை ட்ரால் செய்ய, விராட் கோலி அவர்களை எதிர்த்து ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதன்பிறகே விராட் கோலி தன் வெள்ளைப்பந்து கேப்டன்சியை உதறியதோடு டெஸ்ட் போட்டி கேப்டன்சியிலிருந்தும் வெளியேறினார்.

பிறகு முகமது ஷமி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா என்று இஷாந்த் சர்மாவிடம் விசாரிக்கப்பட்டதாக இஷாந்த் சர்மாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டதும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்றைய வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் ஷமி தேர்வு செய்யப்படவில்லை. ஷர்துல் தாக்கூர் அன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்கள்தான் வீசினார். பேட்டிங்கில் அவர் இறங்க வாய்ப்பில்லை. பின் எதற்காக ஷர்துல் தாக்கூர் என்பது தான் மிகப்பெரிய கேள்வி. தொடர்ந்து ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்படுவதால் பின்னணியில் ஷமியை ஒழித்துக்கட்டும் திட்டம் எதுவும் இருக்கிறதா என்பதும் புரியவில்லை.

இந்திய அணியின் இரண்டு பெரிய பந்து வீச்சாளர்கள் ஷமியும் அஸ்வினும் தான். ஆனால் இவர்கள் இடம் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. ஷர்துல் தாக்கூர் உலகக் கோப்பை திட்டத்திலும் இல்லை. எதிர்கால இந்திய அணியின் திட்டங்களிலும் இல்லை. ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. கிடைத்த வாய்ப்பில் சரியாக வீசுகிறாரா என்றால் அதுவும் இல்லை. இன்றைய வங்கதேச போட்டியில் ஷர்துல் தான் வீசிய முதல் ஓவரிலேயே வங்கதேசத்தின் இடது கை துவக்க வீரர் தன்சித் ஹசன் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸ், பிறகு இறங்கி வந்து மிட் ஆனுக்கு மேல் ஒரு பவுண்டரி, அடுத்த பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸ் என ஒரே ஓவரில் 16 ரன்கள் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து சொதப்பும் ஷர்துல் தாக்கூரை அணியில் தேர்வு செய்வதும் ஷமியை தேர்வு செய்யாததும் நிச்சயம் ஷமி கரியரை முடிக்க நடக்கும் ஒரு தீர்மானமாகவே தோன்றுகிறது.

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் எந்தவித புரிதலும் இல்லாமல் உளறிக்கொட்டிக் கொண்டிருக்கிறார். இந்தப் போட்டிக்கு முன் அவர் கூறியதென்னவெனில், “ஷமி, அஸ்வின் போன்ற வீரர்களின் செல்வாக்கு முக்கியமா, உலகக் கோப்பையை வெல்வது முக்கியமா? ரசிகர்களின் பார்வையில் ஷமியை எடுக்காதது காயப்படுத்துவதாக இருக்கும். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா பார்வையில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த லெவனை முன் நிறுத்துவதே” என்று விவரம் தெரிந்தோ தெரியாமலோ உளறிக்கொட்டியிருக்கிறார்.

செல்வாக்குக்காக யாராவது அணியில் தேர்வு செய்வார்களா? ஷமியும், அஸ்வினும் சீனியர் பவுலர்கள். எந்தப் பிட்சிலும் பிரமாதமாக வீசக்கூடியவர்கள். மிடில் ஓவர்களில் ஷமி நிச்சயம் ஷர்துல் தாக்கூரைவிட சிறந்த பவுலர்தான். தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்துக்கு எதிராக ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்த்தால் செம சாத்துதான் வாங்குவார் என்பது திண்ணம்.

வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் அத்தர் அலி கூறும்போது, “வங்கதேசத்துக்கு எதிராக ஷமி ஆட வேண்டும். அவர் 94 ஒருநாள் போட்டிகளில் ஆடிய அனுபவசாலி. ஷமி 171 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஷர்துல் நல்ல பவுலர்தான் என்றாலும் அனுபவசாலியைத் தேர்வு செய்வதுதான் சரி. ஷமி தன் லைன் மற்றும் லெந்த்தில் துல்லியமாக வீசக்கூடியவர். நல்ல ஸ்விங் உண்டு. சிக்கன விகிதத்தில் ஷமி ஓவருக்கு 6 ரன்களுக்கும் குறைவாக உள்ளார். ஷர்துல் 6 ரன்களுக்கும் மேலாக உள்ளார்.” என்றார்.

இந்திய முன்னாள் வீரரும் தற்போதைய திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரசியல்வாதியுமான மனோஜ் திவாரியும் ஷர்துல் தாக்கூரை விட ஷமிக்குத்தான் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுகிறார். ஆனால் ஷமியை தேர்வு செய்யாமல் இருப்பது கேப்டன் ரோஹித் சர்மா, அணி நிர்வாகம் சம்பந்தமுடையதா அல்லது இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்