ஜெய் ஸ்ரீராம் முழக்கம் | சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் வாரியம் புகார்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பெவிலியன் திரும்பிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை குறிவைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என ரசிகர்கள் முழக்கமிடும் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. இந்த சூழலில் இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளது.

கடந்த 14-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ரிஸ்வானை நோக்கி எழுப்பப்பட்ட ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் அரசியல் ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

“பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் நிலவும் தாமதம், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் ஐசிசி-யிடம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி வீரர்களை டார்கெட் செய்து மைதானத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்தும் புகார் அளித்துள்ளோம்” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

வரும் 20-ம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது. இதற்காக அந்த அணி பெங்களூருவில் முகாமிட்டுள்ளது. இந்த சூழலில் அந்த அணி வீரர்கள் சிலருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல். முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குநர் மிக்கர் ஆர்தர், உலகக் கோப்பை தொடர் பிசிசிஐ நடத்தும் தொடர் போல இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE