சென்னையில் இன்று தொடங்குகிறது தென் மண்டல சப்-ஜூனியர் ஹாக்கி போட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்பில் முதலாவது ஹாக்கி இந்தியா சப்-ஜூனியர் தென் மண்டல சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இருபாலருக்குமான இந்த போட்டிசென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் இன்று (17-ம் தேதி) தொடங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இருபாலரிலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலங்கானா ஆகிய 6 மாநில அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின்முறையில் லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 3, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதும். இறுதிப் போட்டி 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டி போட்டி தொடர்பாக தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் சேகர் ஜே.மனோகரன் கூறியதாவது:

சப்-ஜூனியர் அளவில் 4 மண்டலங்களிலும் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த வகையில் தென் மண்டல போட்டிகளை சென்னையில் நடத்துகிறோம். இதேபோன்று வடக்கு, கிழக்கு, மேற்கு மண்டலங்களிலும் போட்டிகள் நடத்தப்படும். சென்னையில் நடத்தப்படும் தென் மண்டல சாம்பியன்ஷிப்பில் இருந்து ஓட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடும் 30 வீரர்கள் மற்றும் 30 வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் இருந்து ஆடவர் மற்றும் மகளிர் அணி உருவாக்கப்படும். இவர்களுக்கு 30 முதல் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இதேபோன்று மற்ற மண்டலங்களில் இருந்தும் அணிகள் தேர்வாகும். இந்த 4 மண்டல அணிகளுடன், 2 அகாடமி அணிகள் சேர்க்கப்பட்டு 6 அணிகள் கலந்துகொள்ளும் மண்டலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம்.

இதில் இருந்து திறமையான 45 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இவர்களில் இருந்து இந்திய அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த போட்டியை நாங்கள் நடத்துவதன் நோக்கமே, இளம் வயதிலேயே வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் விளையாடுவதற்கான உணர்வையும், அனுபவத்தையும் பெற வேண்டும் என்பதுதான். இந்தியஅணிக்காக தற்போது சர்வதேச போட்டிகளில்விளையாடுபவர்களின் விளையாட்டு அனுபவம்குறைந்தது 4 வருடங்கள் என்ற நிலையில் இருக்கிறது. இந்த வகையில் இளம் வீரர்களுக்கு 8 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டிகளை தொடங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்க நாளான இன்று ஆடவர் பிரிவில் நடைபெறும் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, தெலங்கானாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக மகளிர் பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழக அணி, தெலங்கானாவை சந்திக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE