‘‘நீங்கள் பார்த்தது முழு உண்மை அல்ல?’’ - ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: "இந்தியா அனைத்து மத, சமூகங்களை உள்ளடக்கிய நாடு. நாங்கள் அனைவரையும் அன்புடன் நடத்துகிறோம். அதற்கு நிறைய பேர் சாட்சியாக உள்ளார்கள்" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. போட்டியில் முன்னதாக விளையாடிய பாகிஸ்தான் 191 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் வீரர் ரிஸ்வான் 49 ரன்களில் அவுட்டானார். அவர் மைதானத்திலிருந்து வெளியேறி பெவிலியனுக்கு நடந்து செல்லும்போது இந்திய ரசிகர்கள் சிலர் அவருக்கு எதிரான ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, “முகமது ரிஸ்வானுக்கு எதிராக பார்வையாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் கீழ்த்தரமானது’’ என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதேபோல் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், "மொத்தக் கதையும் வெறும் 20 - 30 விநாடி வீடியோவில் அடங்கி விடாது" எனக் கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. தனது யூடியூப் பக்கத்தில் பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள ஆகாஷ் சோப்ரா, "மிக்கி ஆர்தர் மட்டுமே இதைப் பற்றி கருத்து கூறியிருக்கிறார். மற்ற பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இது தொடர்பாக பேசவில்லை. ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் மற்ற வீரர்களுக்கு ஏன் நடக்கவில்லை. ஒரே ஒரு வீரருக்கு எதிராக மட்டும் ஏன் ரசிகர்கள் இப்படி செய்கிறார்கள் என்பதுதான் அது.

இந்த விவகாரத்தில் முழுக் கதையும் வெறும் 20 அல்ல 30 விநாடி வீடியோவில் அடங்கிவிடாது. நீங்கள் பார்த்தது முழு உண்மை அல்ல. சொல்லப் போனால் சமூக ஊடகங்களில் பாதிக்கும் மேல் உண்மை இல்லை. ஒன்றிரெண்டு வீடியோ கிளிப்களைப் பார்த்து எல்லோருக்கும் அப்படித்தான் நடந்திருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால், அது உண்மை கிடையாது. இந்தியா அனைத்து மத, சமூகங்களையும் உள்ளடக்கிய நாடு. நாங்கள் அனைவரையும் அன்புடன் நடத்துகிறோம். அதற்கு நிறைய பேர் சாட்சியாக உள்ளார்கள். மற்றபடி வேறு யாருக்குனும் ஏதேனும் அஜெண்டா இருந்தால் அதை அவர்கள் தான் கையாள வேண்டும்.

ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷீத் கான், நபி போன்றோருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ரஷீத் ஐபிஎல்லில் குஜராத் அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அவர்களுக்கெல்லாம் இப்படியான சம்பவம் நடக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE