நீண்ட தூர சிக்ஸர் விளாசுவதன் ரகசியம் என்ன? -  நடுவருக்கு ரோஹித் சர்மா பதில்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: நீண்ட தூரத்துக்கு உங்களால் எப்படி சிக்ஸர் விளாச முடிகிறது என்று கிரிக்கெட் நடுவர் கேட்ட கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சுவாரஸ்யமான முறையில் பதில் அளித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றது. மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8-வது முறையாக பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது.

இதுவரை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை, பாகிஸ்தான் வென்றதில்லை என்ற சாதனையையும் இந்திய அணியினர் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 63 பந்துகளில் 86 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றி தேடித்தந்தார். போட்டியின் போது ரோஹித் ஒரு சிக்ஸரை விளாசினார்.

அதைப் பார்த்து வியந்த கள நடுவர் மராயிஸ் எராஸ்மஸ், ரோஹித் சர்மாவிடம் வந்து, "உங்களால் எப்படி நீண்ட தூரத்துக்கு சிக்ஸரை விளாச முடிகிறது. பெரிய அளவில் சிக்ஸர்களை பறக்க விடுகிறீர்கள். இதில் உள்ள ரகசியம் என்ன... நீண்ட தூரம் சிக்ஸர் விளாசுவதற்கு உங்களின் பேட்டில் ஏதோ சக்தி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

இதற்கு ரோஹித் கூறும் போது, “அந்த ரகசியம் இதுதான். நீண்ட தூரம் சிக்ஸர் அடிப்பதற்கான சக்தி எனது பேட்டில் இல்லை. எனது கைகளில்தான் உள்ளது" என்று நடுவரிடம் தனது கைகளின் வலிமையைக் காட்டினார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளிக் குதித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE