ODI WC 2023 | முதல் வெற்றியைப் பெறப் போவது யார்? முக்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை இன்று  மோதல்

By செய்திப்பிரிவு

லக்னோ: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதவுள்ளன. இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பெறுவதில் 2 அணிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்டம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் இகானா மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்த ஆட்டம் 2 அணிகளுக்குமே மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், 2 அணிகளுமே கடந்த 2 லீக் ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளன. எனவே, இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பெறப் போவது யார் என்பதில் 2 அணிகளுக்குமே போட்டி ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது. அதேபோல் 5 முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மட்டுமே சிறப்பாக விளையாடினர். மற்றவர்கள் பிரகாசிக்கவில்லை.

அதேபோல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மார்னஸ் லபுஷேன் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து விளையாடினார். மற்றவர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 177 ரன்களில் சுருண்டது. கடந்த 2 போட்டிகளிலும் அந்த அணி 200 ரன்களைத் தாண்டவே இல்லை. எனவே, தொடக்க வரிசை வீரர்கள் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், மேக்ஸ்வெல், கேப்டன் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா, ஸ்டாயினிஸ் ஆகியோரும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

அதேநேரத்தில் இலங்கை அணியின் கேப்டன் தசன் ஷனகா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக குசல் மெண்டிஸ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா ஆகியோர் அபாரமாக விளையாடினர். அவர்கள் மீண்டும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இலங்கை வெற்றிப் பாதைக்குத் திரும்பலாம். இதில் மெண்டிஸ், சமரவிக்ரமா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியிருந்தனர். எனவே, அவர்கள் மீண்டும் சிறப்பாக விளையாட முயற்சி செய்வர்.

அதேபோல் பந்துவீச்சாளர்கள் மது ஷங்கா, தனஞ்செய டி சில்வா, பதிரனா, தீக்சனா, வெல்லலகே ஆகியோரும் உயர்மட்ட திறனைவெளிப்படுத்தினால் அணிக்கு வெற்றி வாய்ப்பு உண்டு. எனவே, முதல் வெற்றியைப் பெறுவதற்காக 2 அணி வீரர்களுமே முனைப்பு காட்டுவர் என எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE