ஒருநாள் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த 3-வது வீரர் ரோகித் சர்மா!

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஒருநாள் போட்டிகளில் 300 சிக்சர்களை விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இந்தப் பட்டியலில் ஷாஹித் அப்ரிடி முதலிடத்தில் உள்ளார்.

நடப்பு உலக கோப்பை தொடரின் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களில் சுருண்டது. 192 என்ற வெற்றி இலக்கை இந்தியா துரத்தி வருகிறது. இதில் சுப்மன் கில், விராட் கோலி தலா 16 ரன்களில் அவுட்டாக கேப்டன் ரோகித் சர்மா அரை சதம் கடந்து விளாசி வருகிறார். இந்த ஆட்டத்தில் அவர் தற்போதுவரை 5 சிக்சர்களை விளாசியுள்ளார்.

இதில் ஹரிஸ் ரவூப் வீசிய 8வது ஓவரில் ரோகித் சர்மா சிக்ஸ் அடித்ததன் மூலம் ஒருநாள்போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி 351 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 331 சிக்சர்களுடன் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 300 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE