விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: விளையாட்டு மீதான ஆர்வத்தை அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சீன நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 20 வீரர் -வீராங்கனைகளுக்கு ரூ. 9.40 கோடி ஊக்கத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆசிய போட்டிகளில் இந்தியா மொத்தமாக வென்ற 107 பதக்கங்களில், தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இந்திய அளவில் நமது மாநிலம் 5-வது இடத்தைப் பெற்றுள்ளது. தேசிய அளவில், உலகளாவிய போட்டிகளில் தொடர்ந்து உங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக விளையாட்டுத்துறை, உலகமே வியந்து பார்க்கும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. அதில் மிக முக்கியமானது 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி. அதேபோல் இந்த 2 ஆண்டுகளில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்த தமிழகத்தைச் சேர்ந்த1,864 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் ரூ. 52.82 கோடி மதிப்பிலான உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

‘முதல்வர் கோப்பை’ என்ற பெயரில் 15 வகையானப் போட்டிகளை நடத்த ரூ.50.86 கோடி ஒதுக்கப்பட்டது. விளையாட்டு உள்கட்டமைப்பில் அரசு அதிநவீன கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது, விளையாட்டு மீதான ஆர்வத்தை அனைத்து மாணவ, மாணவியருக்கும் அமைச்சர், அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவியர் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அதில் பங்கெடுக்கும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறையின் செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE