ODI WC 2023 | ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த நியூஸி; சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11-வது போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. முஷ்ஃபிகுர் ரஹீம் 66 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 40 ரன்களும், மஹமுதுல்லா 41 ரன்களும் எடுத்திருந்தனர். ஃபெர்குசன் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட் மற்றும் மேட் ஹென்றி தலா 2 விக்கெட்களும், மிட்செல் சான்ட்னர் மற்றும் கிளென் பிலிப்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. ரச்சின் ரவீந்திரா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்து 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கான்வே, 45 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டேரில் மிட்செல் உடன் இணைந்து 108 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் வில்லியம்சன். காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இந்த சூழலில் 107 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த அவர், ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இறுதிவரை களத்தில் இருந்த மிட்செல், 67 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தார். கிளென் பிலிப்ஸ் 16 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் 42.5 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது.

ஹாட்ரிக் வெற்றி: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் என மூன்று தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து. வரும் 18-ம் தேதி சேப்பாக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நியூஸிலாந்து விளையாட உள்ளது. இப்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE