ODI WC 2023 | ‘‘போட்டியை விட டிக்கெட்டுக்கே அதிக அழுத்தம்’’ - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: "இந்தியா - பாகிஸ்தான் போட்டியைவிட, அதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிக அழுத்தம் உள்ளது" என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள 1.30 லட்சம் அமர்ந்து பார்க்கக் கூடிய நரேந்திர மோடி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. 7 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் விளையாட உள்ளது. இதனால், இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் பல விஷயங்கள் குறித்து பேசினார். இந்தியா உடனான போட்டிக்கு அழுத்தம் இருக்கிறதா என செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பாபர் அஸம், "போட்டியை விட, போட்டி டிக்கெட்டுகளுக்கு அதிக அழுத்தம் உள்ளது" என சிரித்துக்கொண்டே கூறினார்.

தொடர்ந்து பேசிய அஸம், "இந்தியாவும் பாகிஸ்தானும் நிறைய முறை ஒருவருக்கொருவர் எதிராக விளையாடியுள்ளோம். அதனால், எங்களுக்கு இது அழுத்தம் மிகுந்த போட்டியாக தெரியவில்லை. ஹைதராபாத்தில் எங்கள் அணிக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. அகமதாபாத்திலும் அதேபோல் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை பாகிஸ்தான் இந்திய அணியை தோற்கடித்ததில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "கடந்த காலங்களில் நடந்ததைவிட நிகழ்காலத்தில் வாழ விரும்புகிறோம். நாங்கள் நன்றாக விளையாட முடியும் என நம்புகிறேன். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அதிக எதிர்பார்ப்புகள் எழுகின்றன. போட்டியைக் காண பாகிஸ்தானில் இருந்தும் நிறைய ரசிகர்கள் வருகிறார்கள். அவர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்பட இது எங்களுக்கு ஒரு வாய்ப்பு.

2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். அதை இங்கேயும் செய்வோம் என்று நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பையில் இதுவரை நான் பெரிய ரன்களை எடுக்கவில்லை. அதுவும் மாறும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE