ODI WC 2023 | அகமதாபாத் நகரில் மருத்துவமனைக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள 1.30 லட்சம் அமர்ந்து பார்க்கக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. 7 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியையொட்டி அகமதாபாத்தில் உள்ள ஏராளமான ஓட்டல் அறைகள் நிரம்பி வழிகின்றன. தங்குவதற்கான கட்டணங்களும் சுமார் 20 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தற்போது மைதானத்தின் அருகே உள்ள மருத்துமவனைகளுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

உடல் பரிசோதனை என்ற பெயரில் போட்டி நடைபெறும் நாளில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வகையில் பலர் மருத்துவமனைகளை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஓட்டல் அறைகளில் இடம் இல்லாததாலும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் மலிவான விலையில் தங்கும் இடத்தை ரசிகர்கள் புத்திசாலித்தனமாக கண்டறிவதாக கருதப்படுகிறது.

அகமதாபாத் மருத்துவ சங்க தலைவர் துஷார் படேல் கூறும்போது, “இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் காண திட்டமிட்டுள்ள சிலர் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைகளில் முன்பதிவு செய்யும் நிகழ்வுகளை நாங்கள் பார்த்து வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE