லக்னோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை தோல்வியுடன் தொடங்கி இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதான த்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.
டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் 30 ரன்களை எட்டவில்லை. அதேவேளையில் கொத்தாக விக்கெட் சரிவையும் சந்தித்தனர். ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் தரமான இந்திய சுழற்பந்து வீச்சு தாக்குதலில் தடுமாற்றம் கண்டது. இது ஒருபுறம் இருக்க அணியில் 2-வது பிரதான சுழற்பந்து வீச்சாளர் இல்லாததும் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கி உள்ளது.
ஆடம் ஸம்பா மட்டுமே அவர்களுக்கு உள்ளஒரே தேர்வாக இருக்கிறது. கிளென் மேக்ஸ்வெல் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் அவரால் எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாயினிஸ் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி உள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்குவது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். ஏனெனில் வெற்றி தேடிக்கொடுக்கக்கூடிய வீரராக தன்னை ஏற்கெனவே ஸ்டாயினிஸ் நிரூபித்துள்ளார். மேலும் லக்னோ ஆடுகளத்தில் அவர், ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி உள்ள அனுபவமும் கைகொடுக்கக்கூடும். விளையாடும் லெவனில் ஸ்டாயினிஸ் இடம்பெறும் பட்சத்தில் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் நீக்கப்படக்கூடும்.
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை துவம்சம் செய்திருந்தது. எய்டன் மார்க்ரம், குயிண்டன் டி காக், ராஸி வான் டெர் டஸ்ஸன் ஆகியோரது சதங்களால் 428 ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்கா அந்த ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 49 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்த எய்டன் மார்க்ரமுடன் குயிண்டன் டி காக், ராஸி வான் டெர்டஸ்ஸன் ஆகியோரும் மீண்டும் ஒரு முறை ரன் வேட்டை நிகழ்த்த ஆயத்தமாக உள்ளனர்.
உலகக் கோப்பை தொடருக்காக லக்னோ மைதனானத்தில் உள்ள ஆடுகளங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆடுகளத்தின் தன்மை எவ்வாறு இருக்கும் என்பது புதிராகவே உள்ளது. ஒருவேளை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் தென் ஆப்பிரிக்க அணி மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான தப்ரைஸ் ஷம்சியை பயன்படுத்தக்கூடும்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜுடன் இணைந்து தப்ரைஸ் ஷம்சி, ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். தெம்பா பவுமா, டேவிட் மில்லர், ஹெய்ன்ரிச் கிளாசன் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். வேகப்பந்து வீச்சில் காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, மார்கோ யான்சன், ஜெரால்டு கோட்ஸி ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.
உலகக் கோப்பை தொடரை பெரிய அளவிலான வெற்றியுடன் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது கடந்த மாதம் நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது தென் ஆப்பிக்க அணி. இது அந்த அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலிய வீரர்கள் மன உறுதி கொண்டவர்கள் என்பதால் அவர்கள் வலுவாக மீண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago