உலகக் கோப்பைக் கால்பந்தாட்ட முதல் காலிறுதியில் ஜெர்மனி அபாரமாக விளையாடி பிரான்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மாட்ஸ் ஹமெல்ஸ் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது. அதன் பிறகு பிரான்ஸின் தீவிரவில்லாத முயற்சிகளை ஜெர்மனி எளிதில் முறியடித்தது.
மீண்டும் கோல் கீப்பர் நியூயர் அபாரம்:
ஆட்டம் காய நேரத்திற்குச் சென்றபோது பிரான்சிற்குக் கிடைத்த கடைசி நேர வாய்ப்பை முறியடித்தார் ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர். 90+3வது நிமிடத்தில் பிரான்ஸ் ஒரு திடீர் மூவைச் செய்ய பந்து இடது புறம் பென்சீமாவிடம் வந்தது பென்சீமா ஜெர்மனி வீரர்களின் நெருக்கடியிலும் ஒரு ஷாட்டை கோல் நோக்கி அடித்தார். அது சற்றே பலவீனமான ஷாட்டாக இருந்தாலும் கோல் நோக்கிச் சரியாக மேலெழுந்துச் சென்ற பந்தை கடைசி வரை எச்சரிக்கையாக இருந்த நியூயர் தட்டி விட்டார். கடைசி விசில் ஊதப்பட்டது. பிரெஞ்ச் ரசிகர்கள் அழுகை வரும் நிலையில் இருந்தனர்.
பிரான்ஸ் பாரம்பரிய கால்பந்து உத்தியை ஆடும் வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து களமிறக்கியது. முக்கியமான ஸ்ட்ரைக்கர் ஜிரூவை அவர்கள் ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் போது களமிறக்கியதும், மற்றொரு இளம் ஸ்ட்ரைக்கரை அதற்கு சற்று முன்னால் களமிறக்கியதும் வர்ணனையாளர்களால் விமர்சனத்திற்குட் படுத்தப்பட்டது.
இடைவேளைக்கு முன்:
ஆட்டம் தொடங்கி 3வது நிமிடத்தில் சற்றே பதட்டத்தில் ஆடியது பிரான்ஸ். அந்த அணியின் சாகோ தவறான திசையில் ஒரு ஷாட்டை அடிக்க அங்கு அபாய ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் சிறிது நேரம் பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். ஆனால் கடைசியில் ஒருவழியாக பந்து அப்பகுதியை விட்டு விரட்டப்பட்டது.
7வது நிமிடத்தில்தான் உறைந்திருந்த பிரான்ஸ் மைதான் வெயிலில் சற்றே சூடு பெற்றது. இடது புறத்திலிருந்து அந்த அணியின் எர்வா கிராஸ் ஒன்றைச் செய்ய ஜெர்மனி அதனை கிளியர் செய்தது, ஆனால் மீண்டும் பந்து பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் வர பந்தை ஜெர்மனி பாக்ஸிற்குள் கொண்டு சென்றது. அங்கு வால்பியூனா கால்களைத் திருப்பி பென்சீமாவிடம் அடிக்க அது பென்சீமாவை விட்டு சற்றே தள்ளிச் சென்றது. பயனில்லாமல் முடிந்தது அந்த மூவ்.
9வது நிமிடத்தில் ஜெர்மன் கோல் கீப்பர் நியூயர் அடித்த கோல் கிக்கை பியூடெங் வலது புறத்திலிருந்து வாங்கி முல்லரிடம் அடிக்க பந்தை கோலுக்கு 30 அடி முன்னால் வாங்கிய முல்லர் பிரான்ஸ் வீரர்களை கதிகலக்கி உள்ளே கொண்டு சென்றார். 3 பேர் முல்லரிடம் குவிந்தனர். அவரோ மிக அனாயசமாக பந்தை ஓசிலிடம் அடிக்க, அவர் கோலை நோக்கி அடித்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
ஜெர்மனி அடித்த கோல்:
ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஜெர்மனி பந்தை எடுத்து செல்ல பிரான்ஸ் கோலுக்கு இடது புறத்தில் பெனால்டிக்கு கொஞ்சம் தொலைவே ஜெர்மனிக்கு ஃப்ரீகிக் கிடைத்தது. ஜெர்மனி வீரர் குரூஸ் ஃப்ரீகிக்கை அடித்தார். அருமையான ஷாட்டான அது மேலாக பெனால்டி பகுதிக்குள் நின்று கொண்டிருந்த மாட்ஸ் ஹமெல்ஸ் தலைக்கு மேல் வர அங்கு அவரை மார்க் செய்திருந்த பிரான்ஸ் வீரர் வரானே என்பவருக்கு மேல் எம்பி பந்தை கோலுக்குள் தலையால் அடிக்கிறார். கோல் கீப்பர் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஜெர்மனி 1-0 என்று முன்னிலை பெற்றது.
33வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் கீப்பர் நியூயரின் அபார சேவ்:
பிரான்ஸ் வீரர் கிரீய்ஸ்மன் மேலாகத் தூக்கி அடிக்கப்பட்டப் பந்தை அபாரமாகக் கணித்து வேகமாக எடுத்து முன்னேறினார். பெனால்டிப் பகுதிக்குள் நுழைந்து வால்பியூனாவுக்கு அடிக்க, அவர் ஒரு பவுன்ஸில் வந்த பந்தை கோல் நோக்கி அடித்தார். அங்கே அது கோல்தான் என்று பிரான்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க அதனை ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர் பாய்ந்து தட்டி விட்ட்டார். ஆனால் பந்து பிரான்ஸ் வீரர் பென்சீமாவிடம் வர அவர் அதனை கோலாக மாற்ற முயற்சித்தார். ஆனால் கோலுக்கு 5 அடி முன்னதாக செய்யப்பட்ட இந்த முயற்சியை ஜெர்மனி வீரர் ஹமெல்ஸ் தடுத்து வெளியே அடித்தார். பிரான்ஸிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனால் ஒரு பயனும் விளையவில்லை.40வது நிமிடத்தில் பிரான்ஸ் ஆட்டம் சற்றே உயிர் பெற்றது. அந்த அணியின் மட்டூய்டி இடது புறத்திலிருந்து பந்தை பென்சீமாவுக்கு அடிக்க கோலுக்கு 9 அடி முன்னால் இருந்த பென்சீமா தலையால் அடிக்க அதனை ஜெர்மனி தடுப்பு வீரர் ஹமெல்ஸ் முறியடித்தார்.
43வது நிமிடத்தில் பிரான்ஸ் விரர் போக்பா ஒரு நல்ல, நீண்ட பாசை அடிக்க அதனை பென்சீமா நீட்டாக எடுத்து வந்து இடது புறம் சில வீரர்களைக் கடந்து பந்தை கடத்தி வந்தார். ஆனால் 20 அடி முன்னாலிலிருந்து அவர் ஷாட் ஆட அதில் போதிய சக்தி இல்லை நியூயருக்கு எளிதான ஒரு சேவ் ஆக அது அமைந்தது.
இடைவேளை நேரத்தில் ஜெர்மனி 1-0 என்று முன்னிலை பெற்றிருந்தது. முதல் பாதியில் ஜெர்மனி கட்டுப்பாட்டில் பந்து 57% இருந்தது. பிரான்ஸ் 5 முறை கோல் முயற்சி செய்தது. ஆனால் இதெல்லாம் கோலுக்கான தீவிர முயற்சிகள் அல்ல. இதில் 3 ஷாட்கள் இலக்கு நோக்கி அடிக்கப்பட்டன. ஷாட்டில் சக்தி இல்லை. ஃபவுல்களில் பிரான்ஸ் 7, ஜெர்மனி 3. பிரான்ஸ் இருமுறை ஆஃப் சைடு செய்தது.
பிரான்ஸின் முயற்சிகளில் பெரும்பாலும் ஒரு காரியவாத நோக்கம் இருக்கவில்லை. சற்றே எதிர்மறையாக ஆடியது போல் தெரிந்தது.
இடைவேளைக்குப் பிறகு:
பிரான்ஸ் இப்போது உத்வேகம் பெற்று ஆடியது. ஆட்டத்தில் ஒரு காரியவாத நோக்கம் தெரிந்தது. 47வது நிமிடத்திலேயே வால்பியூனா ஒரு கிராஸ் செய்ய அது ஜெர்மனியினால் தடுக்கப்பட்டது ஆனால் பந்து மீண்டும் பிரான்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தும் பயனில்லாமல் முடிந்தது.
ஜெர்மனி தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஆடியது. பிரான்ஸ் கோல் அடிக்க நிச்சயம் செய்யும் முயற்சிகளில் தவறு செய்வார்கள் என்று விட்டுவிட்டது.
நடுவர் உதவி இருந்தும் கோல் அடிக்காத பிரான்ஸ்:
ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் வால்பியூனா ஃப்ரீகிக் ஒன்றை எவ்ரா அதனை தலையால் வாங்கி அடிக்க முயன்று தோல்வியுற்றார். எவ்ராவுக்கு திடீரென அவ்வளவு சுதந்திரம் கிடைத்தது எவ்வாறு என்று ரீ-ப்ளே காட்டியது. அவர் மிகத் தெளிவாக ஆஃப் சைடு, ஆனால் நடுவர் கண்டு கொள்ளவில்லை. இது கோலாகியிருந்தாலும் அவர் அனுமதித்திருப்பார். ஆனால் எவ்ரா அந்த வாய்ப்பைத் தவறவிட்டார்.
பிரான்ஸ் அணி லாங் பாஸ்களை ஆடியது ஆனால் அவற்றைத் தெளிவாக வாங்க ஆளில்லை. இந்த இடத்தில்தான் ஜிரூ சிறந்தவர் என்று கருதப்பட்டது ஆனால் அவர் களமிறக்கப்படவில்லை. 54வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரீய்ஸ்மெனை ஃபவுல் செய்த கேடிராவுக்கு மஞ்சள் அட்டைக் காண்பிக்கப்பட்டது.
56வது நிமிடத்தில் ஜெர்மனி ஒரு தாக்குதலைத் தொடுத்தது. முல்லர், லாமிற்கு ஒரு பாஸ் செய்ய அவர் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜருக்கு அடிக்க அவர் 25 அடியிலிருந்து மிக வெளியே அடித்து வாய்ப்பைத் தவறவிட்டார்.
மீண்டும் 61வது நிமிடத்தில் கெடிரா பிரெஞ்ச் வீரர்கள் ஃப்ரீயாக அவரை விட்டுவிட பந்தை சுலபமாக பிரெஞ்ச் பகுதிக்குள் எடுத்துச் சென்றார். மிகத் துல்லியமாக ஸ்ட்ரைக்கர் க்லோஸிற்கு பந்தை அடிக்க அவர் பந்தை எதிர்பார்க்கவில்லை மீண்டும் ஒரு வாய்ப்பு தவற விடப்பட்டது.
இந்தத் தவற விடுதலுக்குப் பிறகு க்லோஸை ஜெர்மன் பயிற்சியாளர் உள்ளுக்குள் அழைத்து அவருக்குப் பதிலாக மேலும் சுறுசுறுப்பான, அபாய விரர் ஷுயர்லியை களத்திற்கு அனுப்புகிறார்.
ஷுயர்லி பிரான்ஸ் வீரர்களையும் தடுப்பணைகளையும் கடுமையாக ஆட்டம் முழுதும் அச்சுறுத்தினார்.
76வது நிமிடத்தில் பிரான்சிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் வரானே ஒரு அருமையான பாஸை காலி இடத்தில் அடிக்க அதனை ஸ்ட்ரைக்கர் ரெமி துரத்திச் சென்று தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அது பென்சீமாவிடம் வர அவர் அருமையாக ஜெர்மன் தடுப்பாட்ட வீரரைக் கடந்து பந்தை ஷாட் அடிக்கும் முன்பு பிளாக் செய்யப்பட்டார்.
81வது நிமிடத்தில் ஓஜில் அருமையாக இடதுபுறம் பந்தை எடுத்துச் சென்று அருமையாக கோல் அருகேயிருந்த முல்லரிடம் அடித்தார் முல்லர் சறுக்கிக் கொண்டு வந்து கோலுக்குள் அடிக்க வேண்டிய பந்தை கோட்டை விட்டார். ஆனால் பந்து மற்றொரு ஜெர்மனி வீரர் ஷுயர்லியிடம் வர அவர் 14 அடிக்கு முன்னாலிலிருந்து மிகவும் சொத்தையாக ஒரு ஷாட்டை அடிக்க அதனை பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் எளிதில் பிடித்தார்.
அதன் பிறகு பிரான்ஸின் ஆட்டத்தில் உத்வேகம் இல்லை. 90+3வது நிமிடத்தில்தான் அந்த ஒரே வாய்ப்பு வந்தது அதையும் நியூயர் தடுத்து விட்டார். காரணம் ஷாட் பலவீனமாக அமைந்தது. பென்சீமாவின் ஷாட்டில் சக்தியில்லை.
90 நிமிடங்களுக்குப் பிறகு 4 நிமிடங்கள் 25 வினாடிகளுக்கு ஆட்டம் சென்றும் பிரான்ஸினால் சமன் செய்ய முடியவில்லை. யு.எஸ் அணி அன்று கடைசி நேரத்தில் போராடி ஒரு கோலை அடித்தது. அதுபோன்ற போராட்டம் பிரான்சிடம் இல்லை.
இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் ஜெர்மனியை பிரான்ஸ் பழிதீர்க்குமா என்று பேசப்பட்டது. 1982ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோற்றது. அதற்கு இப்போது பழிதீர்க்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. பேசப்பட்டது ஆனால் பழிதீர்ப்பெல்லாம் ஒன்றுமில்லை. ஆட்டத்தில் அத்தகைய உத்வேகமோ, நினைவோ இருந்ததாகத் தெரியவில்லை.
பிரான்ஸ் நிர்வாகத்தியின் உத்தியும் திருப்திகரமாக இல்லை. ஸ்ட்ரைக்கர் ஜிரூ மற்றும் ரெமியை கடைசி நேரத்தில் களமிறக்கியது நிச்சயம் அந்த அணி நிர்வாகத்தின் மீது விமர்சனங்களை தொடுக்க வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago