டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில் குணமாக மேலும் ஒருவாரம் ஆகும்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் களமிறங்கவில்லை. ஓட்டலில் தங்கியபடி ஷுப்மன் கில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஷுப்மன் கில்லின் இரத்த அணுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பிசிசிஐ மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த சில நாட்களாக ஷுப்மன் கில்லுக்கு இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஓட்டலிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது இரத்த அணுக்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாக குறைந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு ஷுப்மன் கில்லுக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. தொடர்ந்து திங்கள்கிழமை மாலை அவர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்றார்.

காய்ச்சலில் இருந்து குணமடைந்து ஷுப்மன் கில் முழு உடற்தகுதியை அடைவதற்கு குறைந்தபட்சம் மேலும் ஒருவாரம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அவர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டி மற்றும் 19-ம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியிலும் களமிறங்குவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 6 வார காலங்கள் நடைபெற உள்ளது. ஷுப்மன் கில் குணமடைந்து முழு உடற்தகுதியை அடைவதற்கு காலஅவகாசம் ஆகும் பட்சத்தில் ஆனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்வது குறித்து தேர்வுக்குழுவினர் ஆலோசிக்கக்கூடும். இது நிகழ்ந்தால் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரில் ஒருவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE