ஒரே பந்தில் 13 ரன்கள் - கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை @ ODI WC 2023

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் ஒரு பந்தில் 13 ரன்கள் எடுத்துள்ளார். நியூஸிலாந்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் சாத்தியமற்ற இந்த சாதனை தற்செயலாக படைக்கப்பட்டது.

இன்னிங்ஸின் கடைசி ஓவரை நெதர்லாந்தின் பாஸ் டி லீட் வீசினார். கடைசி பந்தை அவர் புல் டாஸ் பந்தாக வீச, சான்ட்னர் அதை சிக்ஸர் அடித்தார். ஆனால், கள நடுவர் அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்க ப்ரீ ஹிட் கிடைத்தது. இந்தப் பந்தையும் பாஸ் டி லீட் லோ புல் டாஸாக வீச அதனையும் சிக்ஸர் அடித்தார். இப்படியாக இரண்டு சிக்ஸர்கள் மற்றும் நோ-பால் மூலம், ஒரே பந்தில் 13 ரன்கள் எடுக்கப்பட்டது. கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் நிகழ்த்தப்படாத சாதனை இது.

திங்கள்கிழமை (நேற்று) ஹைதராபாத்தில் நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றது. இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் முக்கிய பங்கு வகித்தார். பேட்டிங்கில் 17 பந்துகளில் 36 ரன்களை குவித்த அவர், பவுலிங்கில் ஐந்து விக்கெட்களையும் சாய்த்தார். இதன்மூலம், நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் சான்ட்னர். அவரின் அசத்தல் பெர்ஃபாமென்ஸ் காரணமாக 46.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நெதர்லாந்து அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE