ODI WC 2023 | ஆப்கனுக்கு எதிரான போட்டியிலும் ஷுப்மன் கில் இல்லை: பிசிசிஐ

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் புதன்கிழமை நடக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பங்கேற்கவில்லை.

சென்னை வந்ததில் இருந்தே ஷுப்மன் கில்லுக்கு கடும் காய்ச்சல் இருந்து வருகிறது. அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அவர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டங்களில் களமிறங்குவாரா என்பது தெரிய வரும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது ஷுப்மன் கில் உடல்நிலை குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஷுப்மன் கில் புதன்கிழமை நடக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பங்கேற்க மாட்டார் என அறிவித்துள்ளது. மேலும், இவர் இந்திய அணியுடன் டெல்லிக்கு பயணிக்காமல் சென்னையில் தங்கி மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் பிசிசிஐ அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE