ஐசிசி உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கும் போது நிச்சயம் பிட்ச்கள் இந்திய அணியின் ‘ஹோம் அட்வான்டேஜ்’ சாதகத்துடன் அமைக்கப்படும் என்பது தெரிந்ததே. ஆனால், அந்த உத்தியை ஆஸ்திரேலியா இங்கு சமீபத்தில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரிலும் செய்திருந்தால் இங்கு விளையாடுவதற்கான சூழ்நிலைமைகளை அவர்களுக்குக் கொடுத்ததாக அமைந்திருக்கும். ஆனால், அப்படியெல்லாம் செய்தால் அது நேர்மறையானதாகி விடுமல்லவா?
ஆகவே, ரன்களை விளாசித் தள்ளும் பிட்ச்களை அந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் போட்டு அவர்களது கவனத்தைத் திசை திருப்பி இப்போது வழக்கமான இந்தியப் பிட்ச்சான ‘ஸ்லோ அண்ட் லோ’ என்பார்களே அதாவது பந்துகள் பிட்ச் ஆகி தாமதமாக பேட்டுக்கு வருவதோடு தாழ்வாகவும் வரும் பிட்சை அமைத்தார்கள். இதில் ஆஸ்திரேலியா படுதோல்வி கண்டது. இதனை அவரவர் கருத்தியல்களுக்கு ஏற்ப ‘உத்தி’, ‘தந்திரம்’, ‘சாமர்த்தியம்’, ‘புத்திசாலித்தனம்’ என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். ஏனெனில் ‘இந்திய அணி தவறேதும் செய்து விடவில்லை.’
ஆஸ்திரேலிய அணியில் ட்ராவிஸ் ஹெட் இல்லாததன் வெற்றிடம் நன்றாகவே வெளிப்பட்டது. மேலும் இதுவரை இந்த உலகக் கோப்பையில் போடப்பட்டப் பிட்ச்கள் எல்லாமும் விளாசல் ரகமே. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பின் சென்னை பிட்ச் காத்திருப்பது அவர்களுக்கு எப்படி புரியாமல் போனது என்று தெரியவில்லை.
நேற்றும் பிட்சின் மேற்பரப்பின் மேம்போக்கான இறுக்கத் தன்மையை பார்த்து ஒரு நாள் போட்டி கேப்டன்சி அனுபவம் அற்ற பாட் கமின்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து இந்திய அணியின் பொறியில் சிக்கினார். ஆனால் மேற்பரப்பின் அடியில் ஸ்திரமில்லை, கடினத்தன்மை இல்லை என்பதுதான் இந்திய ஸ்பின் பிட்சின் தன்மை என்பது பாட் கமின்ஸுக்கு எப்படி தெரியும்?
» ODI WC 2023 | உலகக் கோப்பை போட்டிகளுக்கு தர்மசாலா மைதானம் உகந்ததுதானா? - எழும் சர்ச்சை
» “டெஸ்ட் கிரிக்கெட் போல விளையாடுமாறு கோலி சொன்னார்” - வெற்றிக்கு பிறகு கே.எல்.ராகுல்
வார்னர், ஸ்மித் மட்டுமே நன்றாக ஆடினர், இருவரில் ஸ்கோரிங் ரேட்டை உயர்த்தப் போய் வார்னர் குல்தீப் யாதவ் பவுலிங்கில் காலியானார். ஸ்மித்திற்கு ரவீந்திர ஜடேஜா வீசியது டிபிகல் சென்னை பிட்ச் பந்து, ஸ்டம்ப் லைனில் குத்தி திரும்பி ஸ்மித் மட்டையைக் கடந்து பவுல்டு ஆனது. அருமையான பந்து, சிஎஸ்கேவுக்கு நிறைய போட்டிகளை ஆடியதால் சென்னைப் பிட்சை அஸ்வினை விடவும் நன்றாக தெரிந்து வைத்திருந்தார் ஜடேஜா.
உடனே பிட்சைக் கூறாதீர்கள் நாமும்தான் 3 விக்கெட்டுகளை இழந்தோம் என்று கூறுபவர்கள் இந்திய அணியின் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயஸ் அய்யர் டக் அவுட் ஆனது பிட்சினால் அல்ல, படுமோசமான டெக்னிக், ஷாட் தேர்வினால் விளைந்ததேயன்றி வேறல்ல என்பதைப் புரிந்து கொள்வது நலம். அதோடு மிட்செல் மார்ஷ் அந்தக் கேட்சிற்கு ஏன் சென்றார் என்பதுதான் புரியாத புதிர்.
பெரிய கிளவ்வுடன் இருக்கும் விக்கெட் கீப்பரிடம்தானே கேட்சை பிடிக்க அனுமதித்திருக்க வேண்டும்? அதுவும் விராட் கோலிக்கு மிகத்துல்லியமாக ஒரு கேட்சை விட்டால் சரிதாண்டா எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கிறது என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் புலம்பியிருப்பார்கள்.
இஷான் கிஷன் அவுட் ஆனது அராஜகமான ஷாட்டில், வைடு பந்தை சேஸ் செய்து எட்ஜ் ஆகி வெளியேறினார். ரோஹித் சர்மாவின் டெக்னிக் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. அதாவது கிரிக்கெட்டின் பேட்டிங் அரிச்சுவடி வலது கை மட்டையாளர்களுக்கு மட்டை ஃபைன் லெக் திசையிலிருந்து முன்னால் வர வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் ரோஹித் சர்மாவுக்கு நேற்று தேர்ட் மேன் திசையிலிருந்து மட்டை வந்தது, ரிசல்ட் என்ன? சாதாரணமான ஒரு இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார்.
இதையெல்லாம் களநடுவர் அவுட் கொடுப்பதற்கு முன்னாலேயே அவரே கிளம்பியிருக்க வேண்டும், ஆனால் ரிவியூ செய்து நேரத்தை விரயம் செய்தார் ரோஹித். ஸ்ரேயஸ் அய்யருக்கும் மட்டை எங்கிருந்து வர வேண்டும் என்ற ஆரம்பகால அரிச்சுவடியை மறந்து விட்டது போலும். படு அசிங்கமாக கவரில் கேட்ச் கொடுத்து விட்டுச் சென்றார். ஆகவே பிட்சினால் அல்ல, மோசமான பேட்டிங்கினால் இந்திய அணி 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பிறகு பிட்சில் நமக்கு இருந்த எந்த வித அறிகுறிகளும் ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு இல்லை. கோலிக்கு கேட்சும் விடப்பட்டது. பிடித்திருந்தால் இந்திய அணி 19/4 என்று ஆகியிருக்கும். கேட்சை விட்டது இந்திய ரசிகர்கள், ஓய்வறையில் உள்ள ஸ்டாஃப்கள், ரோஹித் சர்மா ஆகியோரிடையே நிம்மதிப் பெருமுச்சை வரவழைத்தது. அதன் பிறகு கோலி ஆடிய ஷாட்கள் ‘வேர்ல்ட் கிளாஸ்’ ரகத்தைச் சேர்ந்தவை. ராகுலும் உறுதுணையாக இருவரும் டெஸ்ட்போட்டி போல் ஆடி வெற்றிபெறச் செய்தனர்.
ஆனால், ஆஸ்திரேலியா என்ன செய்திருக்க வேண்டும்? வார்னர் ஆட்டமிழந்த பிறகு 16-வது ஓவர் முதல் 32-வது ஓவர் வரை ஒரேயொரு பவுண்டரியைத்தான் அடித்தனர். இது அவர்களது தவறு. யாராவது முயற்சியைத் தொடங்கி கொஞ்சமாவது அடித்து ஆடியிருக்க வேண்டாமா?
இத்தனைக்கும் 11 வது ஓவர் முதல் 40வது ஓவர் வரை பின்களத்தில் 4 பீல்டர்களையே நிறுத்த முடியும். அந்த சாதக அம்சங்களையும் பயன்படுத்தாமல் பீல்டர்கள் கைகளுக்கு நேரேயே அடித்துக் கொண்டிருந்தனர். பிட்சில் ஒன்றும் பூதமில்லை. ஆனால் ஏதோ பூதமிருப்பது போலவே ஆஸ்திரேலியர்கள் ஆடினர் என்பதுதான் அவர்களது தோல்விக்குக் காரணம். நிச்சயம் இது 250-260 பிட்ச்தான். இதில் ஜடேஜாவிடம் சிக்கி 82 பந்துகளில் 7 விக்கெட்டுகளை சரசரவென விட்டால் எப்படி மீள முடியும்?
ஆஸ்திரேலியா பவுலிங் போடும்போது பந்து ஈரமாகி சோப்புக்கட்டி போல் ஆகிவிட்டது. ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும், இந்திய மைதானங்களில் அவுட் ஃபீல்ட்கள் படுமோசமாக உள்ளன. ஐசிசி இதை கவனிக்க வேண்டும். இல்லையெனில் வீரர்களை காயத்திற்கு இழக்க நேரிடும். தரம்சலா அவுட்ஃபீல்ட் தன்மை குறித்து சர்ச்சைகள் ஏற்கெனவே கிளம்பியுள்ளதையும் ஐசிசி கவனமேற்கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago