“டெஸ்ட் கிரிக்கெட் போல விளையாடுமாறு கோலி சொன்னார்” - வெற்றிக்கு பிறகு கே.எல்.ராகுல்

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை கே.எல்.ராகுல் வென்றார்.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. இருந்தாலும் 2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த இக்கட்டான சூழலில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து அபார கூட்டணி அமைத்தனர். இருவரும் 165 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர்.

“கோலி உடன் நான் அதிகம் பேசவில்லை. முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், நான் விரைந்து பேட் செய்ய வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் போல இன்னிங்ஸை அணுகுமாறு கோலி, என்னிடம் கூறினார். அணிக்காக சிறப்பாக பேட் செய்ததில் மகிழ்ச்சி.

தொடக்கத்தில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது. இந்த விக்கெட் பேட் செய்ய அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை. இது அசல் சென்னை விக்கெட். நான் சதம் பதிவு செய்ய விரும்பினேன். பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசுவது எனது திட்டமாக இருந்தது. ஆனால் முடியவில்லை. வேறொரு தருணத்தில் சதம் பதிவு செய்வேன் என நம்புகிறேன்” என ராகுல் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE