ODI WC 2023 | உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்குவது யார்?: இந்தியா - ஆஸ்திரேலியா சேப்பாக்கத்தில் இன்று மோதல்

By பெ.மாரிமுத்து

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

1983 மற்றும் 2011-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. அதேவேளையில் ஹாட்ரிக் உட்பட 5 முறை பட்டம் வென்று குவித்துள்ள ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் தலைமையில் களம் காண்கிறது. இந்திய அணியானது ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற நிலையில் உலகக் கோப்பையில் களமிறங்குகிறது.

ஆஸ்திரேலிய அணியானது தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை பறிகொடுத்த நிலையில் உலகளாவிய தொடரை அணுகுகிறது. உலகக் கோப்பை தொடரை கருத்தில்கொள்ளும் போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய ஆடுகளங்களில் அதிக அளவிலான ஆட்டங்களில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள், அனைவரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளனர். டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இந்திய சூழ்நிலைகளில் அதிக அளவிலான நேரத்தை செலவிட்டுள்ளனர்.

தென்னாப் பிரிக்கா மற்றும் இந்தியாவில் நடந்த கடைசி ஆறு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஐந்தில் தோற்ற போதிலும், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக மீண்டும் ஃபார்முக்கு திரும்ப கடுமையாக உழைத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

அந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஷ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங் கில் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். பந்து வீச்சை பொறுத்தவரையில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸம்பா ஆகியோர் கூட்டாக இந்தியாவில் 16 ஆட்டங்களில் விளையாடி 27 விக்கெட்களை 30.77 சராசரியுடன் கைப்பற்றி உள்ளனர்.

1983 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, அதன் பின்னர் ஐசிசி தொடர்களில் இங்கிலாந்தில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை மட்டுமே வென்றுள்ளது. இம்முறை சொந்த மண்ணில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால் இந்திய அணி தனது கோப்பை வறட்சியை உள்நாட்டு நிலைமைகளில் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது.

இந்திய அணியின் விளையாடும் லெவனில் வேகப்பந்து வீச்சை ஜஸ்பிரித் பும்ரா, மொகமது சிராஜ் ஆகியோர் வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நேரடி தேர்வுகளாக இருப்பார்கள். மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோரது இடங்கள் நிலையானவையாக இருக்கும். ஷுப்மன் கில் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர், களமிறங்குவது சந்தேகம் தான். 6-வது பந்து வீச்சாளர் தேவை என அணி நிர்வாகம் கருதினால் ஷர்துல் தாக்குர் இடம் பெறுவார். அதேவேளையில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் தேவையாக இருந்தால் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். இவர்கள் இருவருக்கும் பதிலாக 3-வது சுழற்பந்து வீச்சாளரின் அவசியம் இருந்தால் அஸ்வின் இடம் பெறக்கூடும்.

3 சுழற்பந்து வீச்சாளர்களா?: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “நாங்கள் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஹர்திக் பாண்டியாவை நாங்கள் முறையான வேகப்பந்து வீச்சாளராகவே கருதுகிறோம். அவர், சிறந்த வேகத்தில் வீசக்கூடியவர். இது எங்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. அஸ்வினை களமிறக்குவது அணியின் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கும். இதனால் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதை ஒரு விருப்பமாக வைத்துள்ளோம். எனினும் ஆடுகளத்தை போட்டிக்கு முன்னதாக ஆய்வு செய்துவிட்டு முடிவு எடுப்போம். ஷுப்மன் கில் இளம் வீரர், விரைவில் அவர் குணமடைவார்” என்றார்.

‘சூழ்நிலையை அறிவோம்’: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவை விட இந்தியாவில்தான் நாங்கள் அதிக அளவில் வெள்ளை பந்து கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். இதனால் இங்குள்ள சூழ்நிலைகளை நன்கு அறிவோம். சாதகமான விஷயம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடி உள்ளோம்.

மார்கஸ் ஸ்டாயினிஸுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அணி நிர்வாகம் அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஒருநாள் போட்டிகளில் ஆல்ரவுண்டர்களின் தேவை அதிகமாக உள்ளது. இந்த வகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆடம் ஸம்பா நீச்சல் செய்யும் போது முகத்தில் காயம் அடைந்தார். இது அச்சப்படும் வகையில் இல்லை. மிட்செல் மார்ஷ் வலுவான ஷாட்கள் மேற்கொள்ளக்கூடியவர். அவர், இம்முறை சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் முனைப்பில் உள்ளார்” என்றார்.

ஆஸி.க்கு எதிராக ரோஹித் ஆட்டம் 43; ரன் 2,332 அதிகபட்சம் 209 சதம் 8; அரை சதம் 2 சராசரி 59.79

நேருக்கு நேர் ஆட்டங்கள் 149

ஆடுகளம் எப்படி?


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE