Asian Games | ஆசிய விளையாட்டில் 107 பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை

By செய்திப்பிரிவு

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதன் 14-வது நாளான நேற்று இந்தியா 6 தங்கப் பதக்கங்கள் வென்றது. ஆடவர் டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 112 ரன்கள் சேர்த்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. போட்டி விதிகளின்படி தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த வகையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

கபடி: கபடியில் இருபாலருக்குமான பிரிவிலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. மகளிருக்கான கபடி இறுதிப் போட்டியில் இந்தியா 26-25என்ற கணக்கில் சீன தைபேவை வீழ்த்தியது. ஆடவர் கபடி இறுதிப்போட்டியில் இந்தியா 33-29 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது.

வில்வித்தை: வில்வித்தையில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா 149-145 என்ற கணக்கில் சோ சேவோனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான அதிதி கோபிசந்த் 146-140 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் ரதிஹ் ஜிலிசாதியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆடவருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஓஜாஸ் பிரவீன் டியோடலே 149-147 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த அபிஷேக் வர்மாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

பாட்மிண்டன்: பாட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-18, 21-16 என்ற நேர் செட்டில் கொரியாவின் சோய் சோல்கியூ, கிம் வான்கோ ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

சதுரங்கத்தில் வெள்ளி: செஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணியும், மகளிர் அணியும் வெள்ளிப் பதக்கம் வென்றன. ஹரிகா துரேணாவல்லி, வைஷாலி ரமேஷ் பாபு, வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ பாஸ்கர் ஆகியாரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி தங்களது கடைசி சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி 15 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஆடவருக்கான போட்டியில் ஈரான் தங்கப் பதக்கம் வென்றது. அர்ஜூன் எரிகைசி,டி.குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, பிரக்ஞானந்தா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது.

ஹாக்கி: மகளிர் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலம் வென்றது.

மல்யுத்தம்: மல்யுத்தத்தில் ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் தீபக் பூனியா வெள்ளி வென்றார்

ஆசிய விளையாட்டு போட்டியின் 14-வது நாளான நேற்று பதக்க பட்டியலில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தில் தொர்ந்து நீடித்தது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் 100-க்கும்மேற்பட்ட பதக்கங்கங்களை இந்தியா வெல்வது இதுவே முதன்முறையாகும். இதற்குமுன்னர் கடந்த 2018-ம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா அதிகபட்சமாக 70 பதக்கங்கள் வென்றிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்