ODI WC 2023 | நல்ல தொடக்கத்தை வீண் செய்த ஆப்கன்; தொழில் நேர்த்தியுடன் வென்ற வங்கதேசம்!

By ஆர்.முத்துக்குமார்

தரம்சலாவின் அருமையான இயற்கை பின்னணி அமைந்த மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தபோது 83/1 என்ற நிலையிலிருந்து 156 ரன்களுக்கு மடமடவென சுருண்டது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 34.4 ஓவர்களில் 158/4 என்று அபார வெற்றி பெற்று 2 புள்ளிகளைப் பெற்றது.

ஆப்கானைப் பொறுத்தவரை 2015 உலகக் கோப்பை முதல் ஒருநாள் உலகக் கோப்பைகளில் தொடர்ச்சியாக அடையும் 13-ஆவது தோல்வியாகும் இது. வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மெஹதி ஹசர்ன் மிராஸ் 3 விக்கெட்டுகளுடன் பேட்டிங்கில் அருமையான ஒரு அரைசதத்தையும் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

வங்கதேசத்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் ரஹமனுல்லா குர்பாஸ் (47), இப்ராஹிம் சத்ரான் (22), கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி (18) என்று முதல் 15 ஓவர்களில் 83/1 என்று அருமையான நிலையில் இருந்தனர். ஆனால், ஷாகிப் அல் ஹசன் வந்து மேட்சையே தலைகீழாக மாற்றிவிட்டார். இப்ராஹிம் சத்ரானையும் ரஹமத் ஷாவையும் வெளியேற்றினார். மெஹதி ஹசன் மிராஸ் ஆப்கானின் சரிவில் பெரிய பங்களிப்பு செய்து அவர் பங்குக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடக்கத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பிட்ச் ஆக வீச குர்பாஸ், இப்ராஹிம் அதைப் பயன்படுத்திக் கொண்டு ஓவருக்கு ஒரு பவுண்டரி அடிப்பது என்ற ரீதியில் ஆடினர். அப்போது 47 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை முறியடித்தார். இப்ராஹின் ஸ்வீப் ஆட முயன்று டாப் எட்ஜ் செய்து வெளியேறினார். அதன்பிறகு ரஹமத்தும் அதே பாணியில் வெளியேறினார். 2 விக்கெட்டுகளால் ரன் எடுப்பு வேகம் குறைந்து லொட்டு லொட்டென்று ஆடி டாட் பால்கள் எகிறின.

மெஹிதியை ஆப்கான் கேப்டன் தடவு தடவென்று தடவி 22 பந்துகளில் 3 ரன்களையே எடுத்தார். கடைசியில் ப்ரஷர் தாங்க முடியாமல் மெஹதியிடம் அவுட் ஆனார். மறுமுனையில் பொறுமையுடன் ஆடிய அபாய வீரர் குர்பாஸும் நெருக்கடிக்கு உள்ளாகி ஆட்டமிழந்தார். தவறாக முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தை அடிக்கத் தேர்வு செய்து கொடியேற்றினார்.

அதன் பிறகு 112/3 லிருந்து அடுத்த 44 ரன்களில் 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆப்கான் பேட்டிங்கில் கட்டுக்கோப்பு இல்லை, ஷாட் தேர்வுகளும் மோசமாக அமைந்தது. 22 ஓவர்களில் 73 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 37.2 ஓவர்களில் 156 ரன்களுக்குச் சுருண்டது. இலக்கை விரட்டும் போது வங்கதேசம் தடுமாற்றத்துடன் தொடங்கியது.

லிட்டன் தாஸ் அடித்த ஷாட்டை பாயிண்ட் பீல்டர் பிடிக்க அரைமேட் தாண்டி ஓடி வந்த தன்சித் ஹசன் ரன் அவுட் ஆனார். லிட்டன் தாஸும் ஃபாசலுல்லா பரூக்கி பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொள்ள 27/2 என்று தடுமாறியது. ஆனால் அதன் பிறகு ஆப்கான் அணி 38 ரன்களில் இருந்த போது மெஹதி ஹசனுக்கு நஜ்புல்லா ஒரு கேட்சை விட்டார். ஒருவேளை இந்தக் கேட்சை எடுத்திருந்தால் ஆப்கன் அணி வங்கதேசத்தை கடுமையாக அழுத்தியிருக்கும். மீண்டும் மெஹதி ஹசனுக்கு நவீன் உல் ஹக் பந்தில் முஜீப் ரஹ்மான் இன்னொரு கேட்சை விட்டார்.

அதன் பிறகு அனாவசியமாக ஷாட்களை முயற்சி செய்யாமல் ஒன்று, இரண்டு என்று ரன்களை எடுத்தனர். ஷாண்ட்டோவும், மெஹதியும். 58 பந்துகளில் மெஹதி அரைசதம் கண்டார். இருவரும் 97 ரன்களைச் சேர்த்தனர்.. இதனால் வங்கதேசம் பிழைத்தது. இந்தப் பார்ட்னர்ஷிப் உடைந்த போது வங்கதேச வெற்றிக்கு 33 ரன்கள்தான் தேவையாக இருந்தது. ஷாண்ட்டோவும் அரைசதம் எடுத்தார், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அவுட் ஆனது ஒன்றும் பெரிதாக பாதிக்கவில்லை. ஷாண்ட்டோ 59 நாட் அவுட். வங்கதேசம் வென்றது. ஆட்ட நாயகன் மெஹதி ஹசன் மிராஸ்.

ஆப்கான் பேட்டிங்கினால் தோற்றது, பிறகு 2 கேட்ச்களை விட்டதனால் மெஹதியை செட்டில் ஆக விட்டது. இதனாலும் ஒரு வாய்ப்பை இழந்தது. ஆப்கான் முன்னேற இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE