ODI WC 2023 | நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில் 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல், தலா 68 ரன்கள் எடுத்திருந்தனர். மொகமது நவாஸ் 39 ரன்களும், ஷதாப் கான் 32 ரன்களும் எடுத்தனர். நெதர்லாந்து பவுலர் பாஸ் டி லீட், 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது நெதர்லாந்து. விக்ரம்ஜித் சிங் மற்றும் பாஸ் டி லீட் இணைந்து 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். விக்ரம்ஜித் சிங், 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் பேட் செய்ய வந்த தேஜா, நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் சகிப் ஆகியோர் விரைந்து ஆட்டமிழந்தனர்.

68 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்த பாஸ் டி லீட், மொகமது நவாஸ் பந்து வீச்சில் வெளியேறினார். 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 205 ரன்கள் எடுத்த நெதர்லாந்து போட்டியில் தோல்வியை தழுவியது. லோகன் வான் பீக், 28 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது பாகிஸ்தான் அணி.

ஹாரிஸ் ராஃப், 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அசன் அலி, 2 விக்கெட்கள் கைப்பற்றி இருந்தார். சவுத் ஷகீல், ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார்.

“ஹைதராபாத்தில் எங்களுக்கு கிடைக்கும் ஆதரவை கண்டு நாங்கள் மகிழ்ச்சி கொண்டுள்ளோம். எங்கள் அணி பவுலர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. பேட் செய்தபோது விரைந்து 3 விக்கெட்களை இழந்தோம். இருந்தாலும் ரிஸ்வான் மற்றும் ஷகீல் இணைந்து பேட் செய்து நெதர்லாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தனர். எங்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினோம் என கருதுகிறேன்” என வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE