ODI WC 2023 | பவுலிங் எனும் கலை அழியும் அபாயம் - விதிகளைத் திருத்துமா ஐசிசி?

By ஆர்.முத்துக்குமார்

அகமதாபாத்தில் வியாழக்கிழமை (அக்.5) நடைபெற்ற உலகக் கோப்பை தொடக்க போட்டியில் இங்கிலாந்தின் 283 ரன்கள் இலக்கை நியூஸிலாந்தின் டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா சாதனை சதக்கூட்டணி அமைத்து விளாசித்தள்ளி 36.2 ஓவர்களில் வெற்றி கண்டனர். ஒரு விதத்தில் இங்கிலாந்தின் பாஸ்பால்/மோர்கன் பாடத்தை அவர்களுக்கே நடத்திக் காட்டினர் டெவன் கான்வேயும் ரவீந்திராவும். இதனால் சாதனைகள் பல உடைந்தன, ஆனால் அத்தோடு பவுலிங் என்ற கலையும் கொஞ்சம் கொஞ்சமாக குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்தின் மிகப்பெரிய கவலை அந்த அணியின் பேட்டிங் அல்ல. எப்படியும் ஒரு 400 ரன்களை அடிக்கும் என்பது போல்தான் பேட்டிங் ஆடுகின்றது. ஆனால் இங்கிலாந்தின் பவுலிங் கவலையளிக்கக் கூடியது. காரணம் நேற்று அதன் சிறந்த பவுலர்களான ஆதில் ரஷீத், மார்க் உட் இருவருமே செம சாத்து வாங்கினர் என்பதோடு இவர்களை சர்வ சாதாரணமாக டெவன் கான்வேயும், ரவீந்திராவும் ஆடினர் என்பதே.

2015 உலகக் கோப்பையில் அயர்லாந்தின் 260 ரன்கள் இலக்கை இந்திய அணி 36.5 ஓவர்களில் சேஸ் செய்த பிறகு இதுதான் உலகக் கோப்பையில் சிறந்த அதிரடி சேசிங். அதே போல் ரச்சின் ரவீந்திரா, டெவன் கான்வே சேர்ந்து எடுத்த 273 ரன்கள் பார்ட்னர்ஷிப் உலகக் கோப்பையில் 4வது மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆகும். அதாவது 250+ டார்கெட்டை விரட்டும் போது. அதேபோல் குறைந்த வயதில் நியூஸி வீரர் ஒருவர் உலகக் கோப்பையில் எடுத்த சதம் என்ற பெருமையை 23 வயது 321 நாட்களில் ரச்சின் ரவீந்திரா பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக நேதன் ஆஸ்ட்ல் 1996ம் ஆண்டு உலகக் கோப்பையில் இதே அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராகவே 101 ரன்களை எடுத்தபோது அவர் வயது 24. குறைந்த வயதில் உலகக் கோப்பை சதம் எடுத்த சாதனையை வைத்திருப்பவர் வேறு யார் விராட் கோலிதான்.

இங்கிலாந்தை நேற்று நொறுக்கியது நியூஸிலாந்து என்றும், இது 2019 உலகக் கோப்பை பைனலில் இங்கிலாந்துக்கு உலகக் கோப்பையை தூக்கிக் கொடுத்த கோபம் என்றும் பல விதங்களில் ஊடகங்கள் செய்திகள் சொல்லப்படுகின்றன. ஆனால் ஒரு விஷயத்தை அனைவரும் மறந்து விட்டனர். 283 ரன்கள் இலக்கு 36.2 ஓவர்களில் முடியலாமா என்ற கேள்விதான் அது.

அதாவது 2011 உலகக் கோப்பையின் போது முதல் 10 ஓவர், பிறகு எதிரணி கேப்டனின் சாய்ஸில் பவர் ப்ளே 5 ஓவர்களும், பேட்டிங் அணி சாய்ஸில் 5 ஓவர் பவர் ப்ளேயும் உண்டு. மீதி 30 ஓவர்கள் பவர் ப்ளே இல்லாத ஓவர்கள்தான், இதில் களவியூகக் கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் கேப்டனுக்கும் ஒரு பங்கு இருந்தது, அதிரடி வீரர்களுக்கு களவியூகம் எப்படி அமைக்கலாம் யாருக்கு பவுலிங் தரலாம் என்ற ஒரு தெரிவு இருந்தது, புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி முடிவுகளை எடுத்து வெற்றியும் பெறலாம்.

ஆனால் இப்போது முதல் 10 ஓவர்களில் 2 பீல்டர்களுக்கு மட்டுமே 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே அனுமதி. பிறகு 11வது ஓவரிலிருந்து 40வது ஓவர் வரை 30 யார்டு வட்டத்துக்கு வெளியே 4 பீல்டர்கள்தான் நிற்க முடியும். இதனால் மிடில் ஓவர்களை வீசும் பவுலர்கள் சாத்து முறை வாங்குகின்றனர். நேற்றைய ஆட்டத்தையே எடுத்துக் கொள்வோம். முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து 81 ரன்களை விளாசியது. அதன் பிறகு 40வது ஓவர் வரை மேட்ச் வரவில்லை. 202 ரன்களை 26 ஓவர்களில் விளாசியது நியூஸிலாந்து. இது நல்ல அறிகுறி அல்ல.

ஏனெனில் ஸ்பின்னர்களின் ரோல் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது. முன்பு ஸ்பின்னர் துருப்புச் சீட்டாக இருப்பார்கள். முதல் 10 ஓவர்களில் 80 ரன்களை அணிகள் எடுத்தாலும் அதன் பிறகு ஸ்பின்னர்கள் வரும்போது துருப்புச் சீட்டாக மாறி எதிரணியை 2-3 விக்கெட்டுகள் மூலம் அடுத்த 10 ஓவர்களில் நிலைகுலையச் செய்து விடுவார்கள். ஆனால் இப்போது 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே 4 பீல்டர்கள்தான் எனும் போது, ஒரு லெக் ஸ்பின்னர் வீசுகிறார் என்றால் 4 பீல்டர்களை எங்கு வைப்பீர்கள். லெக் ஸ்பின்னர் என்பதால் லாங் ஆஃப் நிச்சயம் வேண்டும்.

லாங் ஆன், ஸ்வீப்பர் கவர் வைத்தால் லாங் லெக், ஸ்கொயர் லெக், மிட்விக்கெட் பவுண்டரிகள் காலியாகவே இருக்கும். பீல்டர்கள் நிற்கும் இடங்களில் மட்டுமே பந்து போகும்விதமாக பந்துவீச முடியாது. இந்த 3 இடங்களில் பீல்டர்கள் இருந்தால் வளைத்து மிட்விக்கெட்டில் ஸ்லாக் ஸ்வீப் ஆடினால் என்ன செய்ய முடியும்?. நிச்சயம் ஆடுவார்கள், ஏனெனில் அங்குதான் கவர் செய்ய பீல்டர் இல்லையே. சரி நீங்கள் லாங் ஆன் வேண்டாம், டீப் மிட் விக்கெட் நிறுத்துகிறேன் என்றாலும் லாங் ஆனில் அடிக்க முடியாது என்று சொல்வதற்கில்லை.

அதேபோல் ஆஃப் ஸ்பின்னர் வீசுகிறார் என்றால், லாங் ஆஃப், லாங் ஆன், மிட் விக்கெட், ஸ்வீப்பர் கவர் நிறுத்தப்படுகிறது என்றால். டீப் தேர்ட் மேன், ஸ்கொயர் லெக், பைன்லெக், லாங் லெக் ஆகியவை காலியாகவே இருக்கும் ஆகவே ஸ்கூப் ஷாட், ரிவ்ர்ஸ் ஷாட் உள்ளிட்ட ஷாட்களை ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள், அன்று டேவிட் வார்னர் வலது கையிலேயே அஸ்வினுக்கு எதிராக பேட் செய்தார்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் கஷ்டம் தான். லாங் ஆஃப்பை டீப்பில் வைத்தால் லாங் ஆனை முன்னால் வைக்க வேண்டும் அப்போதுதான் ஹூக், புல் ஷாட்கள், பிளிக் ஷாட்களுக்கு இரண்டு பீல்டர்களை லெக் திசையில் டீப்பில் நிறுத்த முடியும். அப்படி நிறுத்தினாலும் பவுலர் ஆஃப் ஸ்டம்பில் வீச முடியாது, பளார் என்று அடித்தால் கவர், எக்ஸ்ட்ரா கவர், பாயிண்ட், தேர்ட்மேன்களில் பவுண்டரி பறக்கவே செய்யும். அதனால்தான் எந்த பவுலரும் மிடில் ஓவர்களில் திணறுகிறார்கள்.

ஏனெனில் இன்சைடு அவுட் போய் ஆடினால் லெக் திசை பீல்டிங்கே ஒன்றுமில்லாமல் ஆகிவிடும், சரி ஆஃப் திசையில் நிறுத்தி வீசுவோம் என்றால் லெக் திசையில் ஒன்றிரண்டு பவுண்டரி பொசிஷன்கள் காலியாக இருக்கும். அதை பேட்டர்கள் பயன்படுத்துவார்கள். இதுதான் சமீப காலங்களில் ரன்கள் 350க்கும் மேல் செல்ல காரணம். முன்பெல்லாம் 283 ரன்கள் டார்கெட்டை 45 ஓவர்களில் சேஸ் செய்தாலே அது நல்ல வசதியான சேசிங், இப்போது 283 போன்ற இலக்கெல்லாம் அழித்தொழிக்கப்படுகின்றது.

ஆகவே இந்த களவியூக பீல்டர் கட்டுப்பாடுகளை ஐசிசி பரிசீலனை செய்தால்தான் கிரிக்கெட் பேட்டிங், பவுலிங் என்பதற்கு இடையேயான சரிசமமான போட்டியாக இருக்க முடியும். அதுதான் கிரிக்கெட் என்னும் கலையை ஒருசார்பாக மாற்றாமல் உண்மையான கிரிக்கெட்டை வழங்கி பார்வையாளர்களையும் த்ரில்லிங்கின் உச்சத்திற்குக் கொண்டு செல்லும். பண்டிதர்களுக்கும் எந்தச் சூழ்நிலையில் எத்தனை புத்தி கூர்மையுடன் ஒரு பேட்டர் பேட் செய்து அணியை வெல்ல வைத்தார், ஒரு பவுலர் எவ்வளவு பிரமாதமாக யோசித்து தன் அணியை வெற்றி பெறச் செய்தார் என்று சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.

முன்பெல்லாம் அதனால்தான் கிரிக்கெட் தொடர்களில் சாதாரண அணிகள் சில வேளைகளில் பெரிய அணியை வீழ்த்தி அதிர்ச்சியளிக்க முடியும். இப்போது அதற்குச் சாத்தியமே இல்லை. பெரிய அணிகள் தங்கள் பணபலம் உள்கட்டமைப்பு மூலம் பெரிய அணியாகவே இருக்கும் சிறிய அணிகள் முன்னேறாமல் சிறிய அணிகளாகவே இருக்கும். ஐசிசி நிச்சயம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும், இல்லையெனில் மெல்ல இனி ஒருநாள் கிரிக்கெட்டும் செத்துப் போகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE