Asian Games T20 | வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி!

By செய்திப்பிரிவு

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி.

டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய இந்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எடுத்த முடிவுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் நியாயம் சேர்த்தனர். 96 ரன்களுக்கு வங்கதேசத்தை கட்டுப்படுத்தினர். தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை அவர் வீழ்த்தினார். இதேபோல் மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 15 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இருவரின் அபார பந்துவீச்சு காரணமாக வங்கதேச அணியால் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் பூஜ்ஜியத்தில் அவுட் ஆனாலும், திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர். இருவரும் வங்கதேச பந்துவீச்சாளர்களை அலறவிட்டனர். இதனால் 9.2 ஓவர்களிலேயே இந்திய அணி 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 26 பந்துகளில் 55 ரன்களும் மற்றும் கெய்க்வாட் 26 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE