ODI WC 2023 | காய்ச்சலால் ஷுப்மன் கில் அவதி: முதல் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல்?

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. மேலும் அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஷுப்மன் கில் தற்போது சிகிச்சையில் உள்ளார். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம். மருத்துவக் குழு அளிக்கும் அப்டேட்களை பொறுத்து அடுத்தகட்ட முடிவு இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இதற்காக சென்னை வந்ததில் இருந்தே ஷுப்மன் கில்லுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. காய்ச்சல் குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதனிடையே, வெள்ளிக்கிழமை (இன்று) அவருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் முடிவுகளை பொறுத்தே ஆஸ்திரேலிய போட்டியில் கில் பங்கேற்பது தெரியவரும். ஒருவேளை டெங்கு உறுதியானால் ஓரிரு போட்டிகளை கில் தவறவிடலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கில்லுக்கு டெங்கு உறுதியாகும்பட்சத்தில் அடுத்து நடக்கவிருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகமே. ஏனென்றால், டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்து மீண்டும் ஃபிட் ஆக குறைந்தது 7-10 நாட்கள் ஆகும். அதேநேரம் ரத்த அணுக்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி இருந்தால் குணமடைய இன்னும் அதிக நாட்கள் ஆகலாம்.

நடப்பாண்டில் மட்டும் ஐந்து சதங்கள் உட்பட 1200 ரன்கள் எடுத்து சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் ஷுப்மன் கில். அவர் இல்லாத பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE