தென் ஆப்பிரிக்காவுக்கு மிக நீண்ட தொடருக்குச் செல்லவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி முன் தயாரிப்புக்கான கால அவகாசமின்றி நேரடியாக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது.
1991-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த போது நன்றிக்கடனுக்காக இந்தியாவில் தன் முதல் தொடரை ஆடியது, கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் நடைபெற்றது. பகலிரவு ஆட்டமான இதில் தென் ஆப்பிரிக்கா 47-வது ஓவரில் வென்றது. அதன் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது.
அதாவது 2 நாட்களில் பெர்த்தில் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஆடியது. மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 64 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசவுத்வேல்ஸ் அணிக்கு எதிரான முதல் 3 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி கண்டது.
மொத்தம் 5 நாட்கள் கூட போதவில்லை, அந்த டெஸ்ட் தொடரை 4-0 என்று இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் இழந்தது. அப்போது இனி இவ்வாறு நடக்கக் கூடாது என்று நிர்வாகிகள் முடிவெடுத்தனர். ஆனால் முன் தயாரிப்பில்லாமல் மீண்டும் மீண்டும் அயல்நாட்டில் சென்று உதை வாங்குவது தொடர் வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியப் பயிற்சியாளராக இருந்த கேரி கர்ஸ்டன் ஒருமுறை தன் சொந்த அக்கறையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் கெட்ட பெயர் எடுக்கக் கூடாது என்பதற்காக முன் கூட்டியே அங்கு சில வீரர்களை அழைத்துச் சென்று அந்தச் சூழ்நிலை, பிட்ச், மைதானம், வானிலை ஆகியவற்றுக்கு இந்திய வீரர்களைப் பழக்கினார். அந்தத் தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடியது.
ஆனால் 2011-ல் மீண்டும் நிலைமை பழையபடியாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிற்குச் சென்று தோனி தலைமையில் 8-0 என்று உதை வாங்கியது. தற்போது தென் ஆப்பிரிக்கா தொடர் இதே போன்ற ஒரு தயாரிப்பில்லாத நிலையில் தொடங்குகிறது.
வரலாற்றிலிருந்து பாடம் கற்கவில்லை எனில், நிகழ்ந்ததே திரும்ப நிகழும் என்பது அனுபவமும், மூதுரையும் நமக்குக் கற்றுத்தந்து கொண்டுதான் இருக்கும். பிசிசிஐ சுத்தமாக வணிகநலன்களுக்காக நெருக்கமாகத் தொடர்களை அமைக்கிறது. இது நல்ல கிரிக்கெட்டுக்கு உகந்ததல்ல. எந்த ஒரு அணியும் அயல் மண்ணில் சென்று அவர்களை அங்கு ஆதிக்கம் செலுத்துவதில்தான் பெருமை அடையும், தன்னம்பிக்கை வளரும், உலகின் நம்பர் 1 அணி என்பதை நியாயப்படுத்த முடியும்.
கோலியின் விமர்சனம்:
இலங்கைக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் அர்த்தமற்ற தொடர் குறித்து விராட் கோலியே, கால அவகாசம் இல்லை, முன் தயாரிப்பில்லை என்று வேதனையடைந்து கூறியதை நாம் பார்த்தோம்.
“ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு விளையாடச் செல்லும் போது எவ்வளவு நாட்கள் அதற்கான தயாரிப்பு தேவை என்பதை நாம் பரிசீலிப்பதேயில்லை” என்றார் கோலி.
இவ்வாறு கூறியவர், ஆக்ரோஷமானவர், சவால்கள் பிடித்தமானது என்பவர் உடனேயே பயணத்துக்கு முந்தைய சாக்குப் போக்குக்குத் தயாராகி, “டெஸ்ட் போட்டிகளில் முடிவு தெரிந்த பிறகு அனைவரும் வீரர்கள் பற்றி தீர்ப்பு கூற வருகின்றனர். நியாயமான ஆட்டமாக இருக்க வேண்டும். அதாவது போதிய கால அவகாசம் முன் தயாரிப்புக்கு கொடுக்கப்பட்டு முடிவுகள் சாதகமாக அமையாத போது வீரர்களை விமர்சனம் செய்யலாம்” என்று விமர்சனங்களை முன் தவிர்த்ததையும் நாம் பார்க்கிறோம்.
எனவே மோசமாக ஆடினால் விமர்சிக்க வேண்டாம், மாறாக தயாரிப்பில்லாமலேயே அடடா எப்படி ஆடிவிட்டார்கள் என்று விதந்தோத வேண்டும். இதுதான் கோலியின் எதிர்பார்ப்பு. ஆனால் எந்த ஒரு இந்திய கேப்டனும் இத்தகைய தர்மசங்கடமான சூழ்நிலைக்குள் தள்ளப்படுதல் கூடாது. தொடருக்கு முன்பே கேப்டனின் காலைவாரக்கூடாது.
ஆனாலும் இது இந்தியாவுக்கு மட்டுமே உள்ள பிரச்சினையல்ல, நவீன கிரிக்கெட் ஆட்டம் அப்படி வணிகமயமாகியுள்ளது, ஏகப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆகவே முதல் நாள் மும்பையில் படுக்கச் சென்று மறுநாள் கேப்டவுனில் எழுந்து டெஸ்ட் போட்டி டாஸுக்குத் தயாராக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் எந்திரங்கள் அல்ல, அல்லது காமிக் புத்தக சூப்பர் ஹீரோக்கள் அல்ல.
தொலைக்காட்சித் தாக்கம்:
தொலைக்காட்சியில்தான் இன்று ரசிகர்கள் தங்கள் சூப்பர் ஹீரோக்களைக் காண வேண்டியுள்ளது. கோலி தன் பற்களில் தோட்டாக்களைப் பிடிக்க வேண்டும், மிகப்பெரிய கட்டிடத்தை ஒரே தாவலில் தாவ வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் கிரிக்கெட் வீரர்கள் சூப்பர் ஹீரோக்களுடன் கற்பனையில் இணைகின்றனர்.
தொலைக்காட்சிகள் வீரர்களை ‘மற்றவர்களாக்கி’ பார்வையாளர்களைப் பொறுத்தவரை எதார்த்தத்திலிருந்து தொலைவுபடுத்துகிறது. எனவே இவர்கள் மனிதர்கள்தான் என்பது சுலபமாக மறந்து விடுகிறது. ஷேக்ஸ்பியர் கதாபாத்திரமான ஷைல்க்கை கோலி தன்னை அறியாமலேயே கூறியது போல், “எங்களுக்கும் ரத்தம் வரும்” என்றார். அதுவும் 3 வடிவங்களிலும ஆடும் வீரர்களுக்கு இன்னும் பிரச்சினைகள் அதிகம். இவர்கள் அந்தந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றுவதோடு, அந்தந்த நாட்டு தட்பவெப்பம், பிட்ச் தன்மைக்கேற்பவும் மாற வேண்டியுள்ளது.
தங்களுக்கு அன்னியமான சூழ்நிலையை தங்களுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளுதல் என்பது தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது.
1971-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் ஆடுவதற்கு முன்பாக இந்திய அணி 8 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியது. அந்தத் தொடரை இந்தியா வென்றது. 2014-ல் இது 2 போட்டிகளானது.
அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளை ஆடுவதால் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் ஆடுவது சாத்தியமற்றதாகி விடுகிறது. இதனால்தான் வெளிநாட்டில் முதல் டெஸ்ட் என்ற முக்கியமான ஒரு போட்டியில் இந்தியா எப்போதும் தோல்வி தழுவ நேரிடுகிறது.
அதன் பிறகு கால்களும் மனங்களும் நகர ஆரம்பிக்கும் போது தொடர் முடிந்து விடுகிறது தோல்வியில். சூழ்நிலைக்கேற்ப தயார் செய்து கொள்ள முடியாதது எப்போதாவதுதான் அணியின் தோல்விக்குக் காரணமாகிறது என்றாலும் இது பங்களிப்பு செய்யும் முக்கியக் காரணமாகிறது. இதுதான் சச்சின் டெண்டுல்கர், திராவிட், கங்கிலி, லஷ்மண் காலங்களிலும் கூட அயல்நாட்டுத் தோல்விக்குக் காரணமாகின்றன. சச்சின் டெண்டுல்கர் காலக்கட்டத்தில் கூட ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்காவில் ஒரு தொடரைக் கூட வெல்ல முடியவில்லை. அவரும் 25 ஆண்டுகள் ஆடிவிட்டார்.
கடந்த மாதம் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்காக 3 வாரங்கள் முன்னமேயே வந்தது, ஆனாலும் 3 டெஸ்ட்களில் தோல்வி தழுவியது. எனவே நீண்ட நாட்கள் வெளிநாட்டில் தங்கி விட்டு ஆடினால் தோல்வி ஏற்படாது என்று கூறுபவர்களுக்கு எதிராக இங்கிலாந்தின் இந்தத் தோல்வியை சிலர் முன் வைக்கலாம். பிஷன் பேடி தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற போது 8 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்கள் நமக்குக் கிடைத்தன, அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற இந்திய அணி மெல்போர்ன், சிட்னியில் வென்று அடிலெய்டில் 492 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்துப் போராடி மராத்தான் ஆட்டத்தில் 445 ரன்கள் எடுத்து இந்திய அணி தோல்வி தழுவி தொடரை 3-2 என்று இழந்தது.
இங்கிலாந்துக்கு முதல் தொடருக்குச் செல்வதற்கு முன்னால் பிராங்க் வொரல், பிஷன் பேடிக்கு அறிவுரை வழங்கிய போது, ‘புல்தரையில் உட்காராதே’ என்றார். இந்திய மைதானங்களில் இது சகஜமான விஷயம். ஆனால் இத்தகைய அறிவுரை தற்போதுள்ள வீரர்களுக்குத் தேவையில்லை என்றாலும் இப்போதைய வீரர்களுக்கு எதிரணியினரை நன்கு தெரிந்தாலும், அயல்நாட்டு பிட்ச், சூழல் நன்கு தெரிந்தாலும், கொஞ்சம் முன்னால் சென்று அங்குள்ள சூழ்நிலைகளுக்கு பழகிக் கொள்வது நிச்சயம் உதவும்.
ஆதாரம்: தி இந்து ஆங்கிலம்
தமிழில்: ஆர்.முத்துக்குமார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago