ODI WC 2023 | சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி - தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. நியூஸிலாந்து - இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று தொடங்கியுள்ளன. இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 45 லீக் ஆட்டங்கள் உட்பட 48 ஆட்டங்கள் 10 நகரங்களில் நடைபெறுகின்றன. தொடக்க நாளான இன்று இங்கிலாந்து–நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதி வருகின்றன. பிற்பகல் 2 மணிக்கு ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, ஐசிசி ஒரு சிறிய விழாவை நடத்தியது.

அதில், ஐசிசி சார்பில் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு சர்வதேச தூதரக நியமிக்கப்பட்ட இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மைதானத்துக்கு அழைக்கப்பட்டார். சச்சினுடன், ஐவகல் ஸ்ரீநாத் மேட்ச் அம்பயர் என்ற முறையில் கலந்துகொண்டார். சச்சின் பெயர் உச்சரிக்கப்பட்டதும் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். பின்னர், தனது கைகளில் உலகக் கோப்பையை சுமந்துவந்த சச்சின் அதை மைதானத்தில் காட்சிக்காக வைத்தார். இதன்பின் முறைப்படி அவரால் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கிவைக்கப்பட்டது.

நியூஸிலாந்து - இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் சீனியர் வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தி இடம்பெறவில்லை. முதலில் பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரின் இரண்டாவது பந்தே சிக்ஸருடன் தொடங்கி வைத்தார் பேர்ஸ்டோவ். முதல் ஓவரில் மட்டும் இங்கிலாந்து 12 ரன்கள் குவித்தது. தற்போது வரை 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது இங்கிலாந்து.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE