உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்!

By பெ.மாரிமுத்து

அகமதாபாத்: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 ஆட்டங்கள் 10 நகரங்களில் நடைபெறுகின்றன. தொடக்க நாளான இன்று இங்கிலாந்து–நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகின்றன.

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இந்தியாவில் இன்று (5-ம் தேதி) தொடங்குகிறது. வரும் நவம்பர் 19-ம் தேதி வரை மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, 5முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, இரு முறை பட்டம் வென்றுள்ள இந்தியா, தலா ஒரு முறை வாகைசூடி உள்ள பாகிஸ்தான், இலங்கை, கடந்த இரு முறையும் 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன.

போட்டிகள் ஹைதராபாத், அகமதாபாத், தரம்சாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் நடைபெற உள்ளன. உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் 1987, 1996 மற்றும் 2011-ம் ஆண்டுகளிலும் இந்தியா உலகக் கோப்பை தொடரை நடத்தி இருந்தது. எனினும் இந்த 3 தொடரையும் இந்தியா அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகளுடன் இணைந்து நடத்தி இருந்தது. ஆனால் தற்போது முதன் முறையாக முழுமையாக ஒட்டுமொத்த தொடரையும் இந்தியா நடத்துகிறது.

இந்த கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகளும் லீக் சுற்றில் ரவுண்ட் ராபின் முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை போதும். இதில் புள்ளிகள்அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூஸிலாந்துடன் இன்று பிற்பகல் 2 மணிக்கு மோதுகிறது.

இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறகிறது. இந்த மைதானத்தில் சுமார் 1.30 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். கடந்தமுறை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சிறந்த முறையில் தொடங்குவதில் கேன்வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி கவனம் செலுத்தக்கூடும்.

முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர்15-ம் தேதி மும்பையிலும் 2-வது அரையிறுதிப் போட்டி நவம்பர் 16-ல் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

உலகக் கோப்பை தொடரில் கடைசியாக நடைபெற்ற 3 பதிப்புகளிலும் போட்டியை நடத்திய நாடுகளே கோப்பையை வென்றுள்ளன. இந்த வகையில் 2011-ம்ஆண்டு இந்தியாவும், 2015-ம் ஆண்டுஆஸ்திரேலியாவும், 2019-ம் ஆண்டு இங்கிலாந்தும் வாகை சூடின. இதனால் சொந்த மண் சாதகங்களுடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது. கடைசியாக அந்த அணி 2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தது. கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் வரும் 14-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்தியா–பாகிஸ்தான் அணிகள் 7 முறை மோதி உள்ளன. இதில்அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது. இதை இம்முறையும் இந்திய அணி தொடரச் செய்வதில் தீவிரம் காட்டக்கூடும். மறுபுறம் பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு போராடக்கூடும்.

நடப்பு சாம்பியனான ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியானது, 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 84 ரன்கள் விளாசி வெற்றி தேடிக்கொடுத்த பென் ஸ்டோக்ஸின் ஆல்ரவுண்ட் திறனை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யக்கூடும்.

வங்கதேச அணியில் கேப்டன் ஷகிப்அல் ஹசனின் பிரியாவிடை உலகக்கோப்பை தொடராக இது அமையக்கூடும். 36 வயதான அவர், 240 போட்டிகளில் விளையாடி 7,384 ரன்கள் குவித்துள்ளார். இதில் 9 சதங்கள், 55 அரை சதங்கள் அடங்கும். பந்து வீச்சில் 308 விக்கெட்களையும் வேட்டையாடி உள்ளார்.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அதிக அளவிலான ஆல்ரவுண்டர்கள் பட்டாளங்களுடன் 6-வது முறையாக பட்டம் வெல்லும்முனைப்பில் களமிறங்குகிறது. 6,397 ரன்கள் குவித்துள்ள அந்த அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னருக்கு இது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கக்கூடும். உலகக் கோப்பை தொடருடன் ரோலர்-கோஸ்டர் உறவை கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இம்முறை தெம்பா பவுமா தலைமையில் களமிறங்குகிறது. 1992 மற்றும் 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் மழை குறுக்கீடுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி இம்முறை முன்னணி வீரர்களின் காயங்களால் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பாதிப்பை சந்தித்துள்ளது. பிரதான வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்க்கியோ, சிசண்டா மகலா ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். இது ஒருபுறம்இருக்க குறைந்த எண்ணிக்கையிலான ஆல்ரவுண்டர்களுடன் அந்த அணி உலகக் கோப்பை தொடரை சந்திக்கிறது.

ஆப்கானிஸ்தான், முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய அணிகளுள் ஒன்றாக திகழக்கூடும். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷீத்கான், முகமது நபி,முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது ஆகியோர் இந்திய ஆடுகளங்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

1996-ம் ஆண்டு உலக சாம்பியனான இலங்கை அணி, சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனையை படைத்த நிலையில் உலகளாவிய தொடரில் தசன் ஷனகா தலைமையில் களமிறங்குகிறது.

தகுதி சுற்று தொடரில் 2 முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகளை வெளியேற்றிய நெதர்லாந்து அணி, சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று சில அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க காத்திருக்கிறது.

12 உலகக் கோப்பை பதிப்புகளில் 8 முறை அரை இறுதி சுற்றில் நுழைந்துள்ள நியூஸிலாந்து அணி முதல் முறையாக பட்டம் வெல்வதற்கான வேட்டையில் தொடர்ந்து ஈடுபடக்கூடும். கடைசியாக நடைபெற்ற இரு உலகக் கோப்பை தொடரிலும் அந்த அணி 2-வது இடம் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் தட்டையாகவே இருக்கும்.இதுபோன்ற ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ரன்களை எளிதாக வேட்டையாட முடியும். இதனால் இம்முறை உலகக் கோப்பை தொடர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையக்கூடும்.

பரிசுத் தொகை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பெறும் அணிக்குரூ.16.50 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா ரூ.6.50 கோடியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்