ODI WC 2023 | பாகிஸ்தான் ஃபீல்டிங்கும், ஷிகர் தவானின் கிண்டலும்!

By ஆர்.முத்துக்குமார்

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை வார்ம்-அப் மேட்சில் ஆஸ்திரேலியா 351 ரன்களைக் குவிக்க, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் மகா விரட்டலில் ஈடுபட்டு 337 ரன்கள் வரை வந்து ஆல் அவுட் ஆகி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த போட்டியில் பாகிஸ்தான் பீல்டிங் சரியாக அமையாதது குறித்து ஷிகர் தவான் கேலி தொனியில் அந்த அணியை பகடி செய்துள்ளார்.

பாகிஸ்தான் என்றைக்குமே பெரிய பீல்டிங் அணி என்று கூற முடியாது. சகட்டுமேனிக்கு கேட்ச்களை விடுவார்கள். பந்துகளை கால் வழியாகவே விட்டு பவுண்டரிகளை விட்டுக் கொடுப்பார்கள். பாகிஸ்தான் கேட்சிங்கை ஒரு முறை இம்ரான் கான், ‘கிளப் மட்ட பீல்டிங்கை விட மோசமானது’ என்று வர்ணித்ததையும் நாம் இங்கு நினைவு கூர வேண்டியுள்ளது. பீல்டர்களிடையே முறையான தொடர்புபடுத்தல் முறை இருக்காது. இதனால் இரண்டு பேர் மோதிக்கொண்டு கேட்சை விடுவர், அல்லது இரண்டு பேருமே பேசாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் மூவர் ஓடி வருவார்கள், பந்து நடுவில் தொப்பென்று விழும். இப்படியான காமெடிகளெல்லாம் பாகிஸ்தான் பீல்டிங்கில் பார்க்க முடியும்.

நேற்றும் ஆஸ்திரேலிய இன்னிங்சின் போது 23ஆவது ஓவரின் முதல் பந்தில் இப்படிப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஹாரிஸ் ராவுஃப் ஆஸ்திரேலிய பேட்டர் மார்னஸ் லபுஷேனுக்கு லெந்த்திற்கும் சற்று குறைவாக ஒரு பந்தை வீச, லபுஷேன் அதனை டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். அங்கு முகமது வாசிம், முகமது நவாஸ் இருவரும் பந்தை நிறுத்த முயன்றனர். ஆனால், பந்தை நிறுத்தும் முயற்சியில் இரண்டு பீல்டர்களும் ஒருவர் மீது ஒருவர் பயங்கரமாக மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பந்து இருவரையும் ஏமாற்றி இடையில் புகுந்து பவுண்டரிக்குச் சென்றது.

பார்க்க மிகவும் காமெடியாக இருந்த இந்தக் காட்சியில் வேடிக்கை என்னவெனில், இருவரும் மைதானத்தில் ஏதோ ஓடிப்பிடித்து விளையாடுவது போல் நீ என்னைத் தொட்டு விடுவாயா, நான் உன்னைத் தொட்டு விடுவேன் என்பது போல் ஒருவரை விட்டு ஒருவர் விலகிச்சென்ற போது பந்து இடையில் புகுந்து பவுண்டரிக்குச் சென்றது செம வேடிக்கையான காட்சியாக அமைந்தது. அதிலும் பந்து இருவருக்கு இடையில் புகுந்து பவுண்டரிக்குச் சென்ற போது கூட, இருவரும் சற்றே தாமதமாகவே ரியாக்ட் செய்தனர். ஒருவர் ரியாக்ட் செய்து பந்தை விரட்டிச் செல்வதற்குள் அது எல்லைக் கோட்டைக் கடந்து சென்று விட்டது.

இந்த காமிக் மிஸ் ஃபீல்ட் வீடியோவை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக ஊடகத்தில் பகிர்ந்த ஷிகர் தவான், “பாகிஸ்தானும் பீல்டிங்கும் எப்போதுமே முடியாத காதல் கதை” என்று செம்மையாக கேலி செய்துள்ளார். இம்ரான் கான், சர்பராஸ் நவாஸ், ஹசீப் மசூத், சிக்கந்தர்பக்த், முதாசர் நாசர், அப்துல் காதிர், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர் உள்ளிட்ட ஆகச்சிறந்த பவுலர்கள் பாகிஸ்தானின் பீல்டிங்கினால் நிறைய பாதிப்படைந்துள்ளனர்.

மிஸ்பீல்டிங்கில் என்ன பிரச்சனை என்றால் ஒரு பேட்டரை ஒரு குறிப்பிட்ட ஓவரில் ஒரு பவுலர் பயங்கரமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பார். அவரை வீழ்த்த அவருக்கு ஒரு வாய்ப்பு அந்த ஓவரில் இருக்கும். அப்போது மிஸ்பீல்ட் செய்து சிங்கிள் எடுக்க விட்டால், அவர் சுதாரித்து பிறகு நின்று விடுவார். இப்படி நிறைய உதாரணங்களை சுட்ட முடியும்.

ஒரு முறை ஸ்ரீகாந்த் கேப்டன்சியில் பாகிஸ்தானுக்கு 1989-ம் ஆண்டு தொடரில் டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடிய போது நவ்ஜோத் சிங் சித்து கொடுத்த ஒரு ஹை கேட்ச் மிகவும் சுலபமான கேட்சை ஜாவேத் மியாண்டட் கல்லியில் அப்படியே கைகளுக்கு நடுவே வழிய விட சித்து 97 ரன்களை எடுக்க, சச்சின் டெண்டுல்கர் 57 எடுத்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 74 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தாலும், 2வது இன்னிங்சில் 38/4 என்று இருந்த போது இந்தக் கேட்சை விட்டார் ஜாவேத் மியாண்டட். இதனால் பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இப்படி உலகக்கோப்பைகளில் விட்ட கேட்ச்கள் ஏராளம்.

இவர்கள் கேட்ச்களை பிடிக்க மாட்டார்கள் என்ற வெறுப்பில்தான் அவர்கள் பந்தின் தையலை தூக்கி விட்டு அல்லது சோடாமூடியால் தேய்த்து ரிவர்ஸ் ஸ்விங் மூலம் எல்.பி, பவுல்டு என்று அதிக விக்கெட்டுகளை எடுத்தனர். ஆகவே பாகிஸ்தான் செய்த பால் டேம்பரிங் மோசடியின் பின்னணியில் அந்த அணியின் மோசமான பீல்டிங் என்ற காரணம் உள்ளது.

ஆகவே ஷிகர் தவான் கூறுவது போல், ‘பாகிஸ்தானுக்கும் பீல்டிங்கிற்கு எப்போதும் தீராக்காதல் உள்ளது’. இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பீல்டிங்கில் முன்னேறினால்தான் ஏதாவது அவர்கள் செய்ய முடியும். ஏனெனில் எல்லா அணிகளும் அடிக்கிற அடியைப் பார்த்தால் பாகிஸ்தான் பீல்டிங்கில் கோட்டை விட்டால் அந்த அணிக்கு எதிராக நிச்சயமாக இங்கிலாந்தோ, தென் ஆப்பிரிக்காவொ 400 ரன்களை அடிக்கக் கூடிய வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்