“கம்பீர், சேவாக், யுவராஜுக்கு கிடைக்காத வாய்ப்பு” - இந்திய அணி கேப்டன்சி குறித்து ரோகித் சர்மா

By செய்திப்பிரிவு

டெல்லி: "எல்லா நேரமும் ஒருவர் விரும்புவது கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று" என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நாளை (5-ம் தேதி) முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் 5ம் தேதி சென்னையில் நடக்கும் தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி 2013ல் கைப்பற்றிய சாம்பியன்ஸ் டிராபியே கடைசியாக வென்ற ஐசிசி கோப்பை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் கழித்து ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட உள்ளது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், அதன்பிறகு விராட் கோலி அணியின் கேப்டனாக இருந்தார். கடந்த ஆண்டு ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

கேப்டனாக முதல் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா, கேப்டன்ஷிப் பற்றி மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், "என்னைப் பொறுத்தவரை ஓர் அணியின் கேப்டனாக இருப்பதற்கு சிறந்த நேரம் 26 - 27 வயது. ஏனென்றால், அந்த வயதில் ஒரு வீரர் உச்சத்தில் இருப்பார். ஆனால், எல்லா நேரமும் ஒருவர் விரும்புவது கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

இந்திய அணியின் கேப்டன்சி பற்றி பேசினால், இந்திய அணியில் பல ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள். பல வீரர்கள் கேப்டன் பொறுப்பை வகித்திருக்கிறார்கள். எனக்கு முன்பாக தோனி, விராட் இருவரும் கேப்டனாக இருந்தனர். அவர்களை போல எனது முறைக்கு நான் காத்திருக்க வேண்டியிருந்தது. காத்திருப்பு முற்றிலும் நியமானது. அதேநேரம் கௌதம் கம்பீர், வீரேந்திர சேவாக் போன்ற கேப்டனாக முடியாத வீரர்களும் அணியில் இருந்துள்ளனர். இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்கள் இவர்கள்.

அதேபோல், யுவராஜ் சிங்கை மறந்துவிடக் கூடாது. யுவராஜ் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்ததில்லை. ஆனால், அவர் ஒரு மேட்ச் வின்னர். அவரும் ஒருகட்டத்தில் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுதான் வாழ்க்கை. எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு நன்றியுள்ளவனாக இருக்க விரும்புகிறேன்" என்று ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE