ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நாளை (5-ம் தேதி) முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டாப் 5 அணிகளின் பலம், பலவீனம், வாய்ப்புகளை எப்படி என்பதை காண்போம்…
இந்தியா: ஆசியக் கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு தொடரிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்கு சிறந்த முறையில் தயாராகி உள்ளது. எனினும் சிறந்த விளையாடும் லெவனை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் சென்னையில் மோதுகிறது.
பலம்: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரது பேட்டிங். ஷுப்மன் கில் கடந்த ஓராண்டில் மட்டும் 1,200 ரன்களுக்கு மேல் வேட்டையாடி சிறந்த பார்மில் உள்ளார். கே.எல்.ராகுலின் முழு உடற்தகுதியும், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அவரது சதமும் அணியின் வலுவை அதிகப்படுத்தி உள்ளது. பந்து வீச்சில் மொகமது ஷமியின் நேர்த்தி, மொகமது சிராஜின் வேகம், பும்ராவின் ஸ்விங், யார்க்கர் மற்றும் ஹர்திக் பாண்டியா இருபுறமும் பந்தை ஸ்விங் செய்யும் திறன் ஆகியவை பலமாக பார்க்கப்படுகிறது. ஸ்ரேயஸ் ஐயர் இருப்பதால் அணியின் 4-வது வரிசை வீரர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
பலவீனம்: சுழற்பந்து வீச்சு பலமாக இருப்பது போன்று தோன்றலாம், ஆனால் மூத்த வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக விளங்கும் தட்டையான ஆடுகளங்களில் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை தீர்மானிக்க எந்த வழியும் இல்லை. இருப்பினும் ஃபார்மை பொறுத்தவரையில் ஜடேஜாவுடன் குல்தீப் யாதவ்தான் விளையாடும் லெவனில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர், ஃபார்மை இழந்தாலோ அல்லது காயம் அடைந்தால் மட்டுமே அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். பேட்டிங்கில் ஜடேஜாவின் சமீபகால ஃபார்ம் சிறப்பானதாக இல்லை. அதேவேளையில் அஸ்வினும் பெரிய அளவிலான ஹிட்டரும் இல்லை. டாப் ஆர்டர் பேட்டிங்கில் முதல் 5 இடங்களில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை. இஷான் கிஷன் இருந்தாலும் கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் இருப்பதால் அவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது அரிதே.
வாய்ப்பு: சொந்த மண்ணில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால் பட்டம் வெல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. பனிப்பொழிவில் இலக்கை துரத்துவது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
சவால்: ‘துரத்தல் நாயகன்’ என வர்ணிக்கப்படும் விராட் கோலிக்கு, சச்சினின் 49 சதங்கள் சாதனையை முறியடிக்க 3 சதங்களே தேவையாக உள்ளன. இதனை அவர், உலகக் கோப்பை தொடரில் அடையக்கூடும்.
ஆஸ்திரேலியா: 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இம்முறை பாட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் இந்தியாவுடன் வரும் 8ம் தேதி மோதுகிறது.
பலம்: ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை ஆழமானதாக உள்ளது. 9-வது இடத்தில் களமிறங்கும் வீரர் கூட வலுவான ஹிட்டராக உள்ளார். டேவிட் வார்னருக்கு இது கடைசி உலகக் கோப்பை தொடர் என்பதால் தட்டையான ஆடுகளங்களில் அவர், ரன் வேட்டையாடக்கூடும். வலுவான ஷாட்களை மேற்கொள்ளக்கூடிய ஆல்ரவுண்டர்களான மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோர் சுழற்பந்து வீச்சுக்கு எதிராகவும் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர்கள். ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் ஆகியோரும் அதிரடிக்கு சளைத்தவர்கள் இல்லை. இந்திய ஆடுகளங்களில் மற்ற வெளிநாட்டு அணிகளை விட அதிக வெற்றிகளை குவித்த அணியாக ஆஸ்திரேலிய அணி திகழ்கிறது. உலகளாவிய போட்டிகளில் எப்போதுமே ஆஸ்திரேலிய அணி கூடுதல் உத்வேகத்துடன் விளையாடும். இம்முறை இதை அந்த அணி தொடரச் செய்யக்கூடும்.
பலவீனம்: டிராவிஸ் ஹெட் காயம் காரணமாக அவதிப்படுவது பலவீனமாக கருதப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பாவுக்கு உறுதுணையாக செயல்படுவதற்கு சரியான வீரர் இல்லை. கிளென் மேக்ஸ்வெல் சுழற்பந்து வீசக்கூடியவர் என்றாலும் அனைத்து ஆட்டங்களிலும் அவர், 10 ஓவர்களை வீசுவது சாத்தியம் இல்லை.
சவால்: பேட்டிங் வரிசையில் வயதான வீரர்கள் அதிகம் உள்ளனர். சில நேரங்களில் விக்கெட்களை கொத்தாக தாரை வார்க்கின்றனர். அதிரடியாக விளையாடக்
கூடிய அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரில் ஒருவர் மட்டுமே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெற முடியும். தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் தட்டையான ஆடுகளங்களில் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவது சிரமம்தான். இதனால் 300 ரன்களுக்கு மேலான இலக்கை துரத்துவது சவாலாகவே இருக்கும்.
வாய்ப்பு: ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கை, வேறு எந்த அணியும் இல்லாத வகையில் அதிகமாக உள்ளது அந்த அணிக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. கேமரூன் கிரீன், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் ஆகியோர் அணிக்கு பல பரிமாண தோற்றத்தைக் கொடுக்கிறார்கள். இவர்கள், யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடாவிட்டாலும் கூட அதை மற்றொருவர் பூர்த்தி செய்பவராக உள்ளார். டிராவிஸ் ஹெட் உடற்தகுதி பெறும் போது, அவர் சில பகுதி நேர சுழற்பந்து வீச்சையும் மேற்கொள்ள முடியும். அனுபவம் வாய்ந்த பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் பந்து வீச்சில் பாகிஸ்தான், இந்திய அணிகளுக்கு இணையாக இருக்க வாய்ப்புள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க் பெரும்பாலான முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடியவர்.
நியூஸிலாந்து: உலகக் கோப்பைக்காக இந்தியா வருவதற்கு முன்பு மூன்று போட்டிகள் கொண்ட ஆட்டத்தில் வங்கதேசத்தை 2-0 என்ற கணக்கில் வென்றது. மேலும் இரு பயிற்சி ஆட்டங்களிலும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தியது. இந்த செயல் திறனை அவர்கள், பெரிய அளவில் பிரதிபலிக்க வேண்டும்.
பலம்: புள்ளி விவரங்களின்படி இந்திய ஆடுகளங்களில் நியூஸிலாந்து அணி இதுவரை தடுமாறும் அணியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் ஐசிசி தொடர்களில் அந்த அணியின் செயல் திறன் என்பது வேறு மட்டத்தில் இருப்பதையே கடந்த 3 தொடர்களும் காட்டுகின்றன. 50 ஓவர் உலகக் கோப்பையில் கடைசியாக இரு தொடர்களிலும் நியூஸிலாந்து 2வது இடம் பிடித்துள்ளது. அதேவேளையில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றிருந்தது.
டேவன் கான்வே, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் போன்ற அற்புதமான வீரர்களையும் வில்லியம்சன், டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் போன்ற அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்களையும் உள்ளடக்கிய சமநிலை பொருந்திய அணியாக திகழ்கிறது. மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, லாக்கி பெர்குசன் மாட் ஹென்றி ஆகியோரும் டிரெண்ட் போல்ட், டிம் சவுதி கூட்டணிக்கு பலம் சேர்க்கக்கூடியவர்கள்.
பலவீனம்: இந்தியாவில் இதுவரை நியூஸிலாந்து அணி 61 ஆட்டங்களில் விளையாடி 18-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ள கேன் வில்லியம்சன், எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொறுத்துதான் நியூஸிலாந்து
அணியின் அதிர்ஷ்டம் தீர்மானிக்கப்படக்கூடும். ஏனெனில் 32 வயதான, வில்லியம்சன் கேப்டனாக மட்டுமல்லாமல், ஆடுகளத்தின் நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் மட்டை வீச்சில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி தனது தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் நாளை (5-ம் தேதி) பலப்பரீட்சை நடத்துகிறது. நியூஸிலாந்து அணி கடந்த 4 தொடர்களிலும் நாக் அவுட் சுற்றில் கால்பதித்துள்ளது. 2019-ம் ஆண்டு தொடரில் நூலிழையில் பட்டம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.
வாய்ப்பு: கேன் வில்லியம்சன், டிரெண்ட் போல்ட், டிம் சவுதி ஆகியோர் கூட்டாக உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு இம்முறை கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டில் டேவன் கான்வே, சிஎஸ்கே அணிக்காக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இதை அவர், உலகக் கோப்பை தொடரில் பிரதிபலிக்க செய்யக்கூடும். மிட்செல் சாண்ட்னர் பந்து வீச்சு, பேட்டிங்கில் முக்கிய வீரராக திகழக்கூடும்.கிளென் பிலிப்ஸ், வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக்கூடும்.
சவால்: சமீபத்திய ஃபார்மை கணக்கில் எடுத்துக் கொண்டால், நியூஸிலாந்து இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இங்கிலாந்து: நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் தலைமையில் களமிறங்குகிறது. கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் 3-வது அணி என்ற பெருமையை பெறும் முனைப்பில் அந்த அணி களமிறங்குகிறது. இங்கிலாந்து அணி ஆழம் மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது, ஆனால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வது அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். அதேவேளையில் ஐபிஎல் அனுபவம் அவர்களுக்கு உதவக்கூடும்.
பலம்: ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்டு அணிக்கு திரும்பி இருப்பது அசுர பலமாக கருதப்படுகிறது. மேலும் ஒரு உலகளாவிய தொடரை எவ்வாறு வெல்ல வேண்டும் என்பதை அறிந்த பல வீரர்கள் அணியில் உள்ளனர். இந்த பெருமையை இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா அணியில் மட்டுமே காண முடிந்தது. இங்கிலாந்து அணி நீண்ட பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளளது. ஆனால் இதைவிட ஆக்ரோஷமான அணுகுமுறையால் எதிரணியை அடக்கும் திறனே இங்கிலாந்து அணியை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கிறது. இந்த ஆக்ரோஷ அணுகுமுறை வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவர்களின் ஆதிக்கத்தின் முக்கிய அங்கமாகும். ஃபார்மில் இல்லாத ஜேசன் ராய்க்கு பதிலாக ஹாரி புரூக் சேர்க்கப்பட்டிருப்பது அந்த அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் ஆகியோர் இந்திய ஆடுகளில் முக்கியமானவர்களாக திகழக்கூடும்.
பலவீனம்: இங்கிலாந்து அணி இந்த ஆண்டில் 10 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளது. சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை 3-1 என வென்றிருந்தது. அயர்லாந்து தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. போதிய அளவிலான போட்டிகளில் பங்கேற்காதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. மேலும் தொடரின் போக்கில் ஆடுகளத்தின் மேற்பரப்பின் தன்மை மந்தமாகும் போது பேட்டிங்கில் ஆக்ரோஷ அணுகுமுறை எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சவால்: சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சவால்களை சந்திக்கக்கூடும்.
வாய்ப்பு: கடந்த உலகக் கோப்பையில் இடம் பெற்று 9 வீரர்கள் இம்முறையும் அணியில் உள்ளனர். பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக 124 பந்துகளில் 182 ரன்களை வேட்டையாடி இருந்தார். அவருடன் ஜாஸ் பட்லரின் ஐபிஎல் அனுபவம், சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள உதவக்கூடும்.
பாகிஸ்தான்: பாபர் அஸம் தலைமையில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 6-ம் தேதி நெதர்லாந்துடன் மோதுகிறது. உலகளாவிய தொடர்களில் பாகிஸ்தான் எப்போதும் கணிக்க முடியாத அணியாகவே திகழ்ந்துள்ளது. இதற்கு இம்முறையும் விதிவிலக்கு இருக்காது என்றே கருதப்படுகிறது. சிறந்த பார்மில் இருந்த அந்த அணி ஆசிய கோப்பை தொடரில் படுதோல்விகளை சந்தித்தது. இது அந்த அணியில் உள்ள குறைகளை அம்பலப்படுத்தியது. இம்முறை இந்தியாவில் விளையாடுவது பாகிஸ்தான் வீரர்களுக்கு ஒரே இரவில் தேசிய ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடும்.
பலம்: நசீம் ஷா காயம் காரணமாக விலகினாலும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு சற்று வலுவாகவே உள்ளதாகவே கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான இடங்களில் தொடக்க ஓவர்களில் பந்துகள் ஸ்விங் ஆகும். இதை ஷாகின் ஷா அப்ரிடி பயன்படுத்திக் கொள்ளக்கூடும். பேட்டிங்கில் பாபர் அஸம், மொகமது ரிஸ்வான் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.
பலவீனம்: தொடக்க ஓவர்களில் ஷாகீன் அப்ரிடியுடன் நசீம் ஷா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இந்த வேகக்கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது இதில் ஒருவர் இல்லாதது எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க வாய்ப்பை வழங்குவதாக உள்ளது. நஷீம் ஷாவின் இடத்தை பூர்த்தி செய்ய ஹரிஸ் ரவூஃப் முயற்சி செய்யக்கூடும். மிதவேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி நெருக்கடியுடன் களமிறங்குகிறார். இமாம் உல் ஹக், பஹர் ஸமான் ஜோடி தொடக்க பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக இல்லை. இதில் இமாம் உல் ஹக்கின் ஸ்டிரைக் ரேட் 82.18 ஆகவே உள்ளது. சுழற்பந்து வீச்சில் ஷதப் கான், மொகமது நவாஸ் ஆகியோர் சிறந்த பார்மில் இல்லை.
சவால்: நசீம் ஷா இல்லாதது அணியின் பந்து வீச்சு சமநிலையை சீர்குலைத்துள்ளது. அணியில் உள்ள மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடையாமல் பார்த்துக் கொள்வதில் அணி நிர்வாகம் கவனம் செலுத்தக்கூடும்.
வாய்ப்பு: சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஆஹா சல்மான் போன்றவர்களுக்கு இந்த தொடர் பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் விளையாடும் லெவனில் இடம்பெறுவது சந்தேகமே. இதில் சவுத் ஷகீலின் டெஸ்ட் போட்டி சராசரி 87.50 ஆகும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago