Asian Games 2023 | பருல் சவுத்ரிக்கு 5,000 மீ. ஓட்டத்தில் தங்கம்; தமிழக வீரர் பிரவீன் சித்ரவேலுக்கு வெண்கலம்

By செய்திப்பிரிவு

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பருல் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பருல் சவுத்ரி 15:14.75 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். அதேநேரம், ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் முகமது அப்சல் பந்தய தூரத்தை 1:48.43 விநாடிகளில் எட்டிப்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதேபோல், ஆடவர் டிரிபிள் ஜம்ப் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல் வெண்கலம் வென்றார். பிரவீன் சித்ரவேல் தனது ஆறாவது முயற்சியில் 16.68 மீ தூரம் தாண்டி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

தடை ஓட்டம்: 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா ராமராஜ் பந்தய தூரத்தை 55.68 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஸ்குவாஷில் பதக்கம் உறுதி: ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சவுரவ், அபய்-அனாஹத் & தீபிகா-ஹரிந்தர்பால் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

பேட்மிண்டன்: ஆடவருக்கான பேட்மிண்டன் போட்டியின் 32-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-0 (21-16, 21-11) என்ற கணக்கில் தென் கொரியாவின் லீ யுங்யுவை தோற்கடித்தார்.

உயரம் தாண்டுதல்: ஆடவருக்கான 1500 மீட்டர் டெகாத்லானில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 7666 புள்ளிகள் பெற்று தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1974 முதல் ஆடவருக்கான டெகாத்லானில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

லவ்லினா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி: பெண்கள் குத்துச்சண்டை போட்டியின் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் தாய்லாந்து வீராங்கனையை 5-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த வருடம் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார் லவ்லினா.

ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்: மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றார். அன்னு ராணி 62.92 தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கி கொண்டார்.

தற்போது இந்தியா 15 தங்கப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE