முதல் சர்வதேச போட்டியில் உணர்ச்சிவசப்பட்ட தமிழக வீரர் சாய் கிஷோர் - வைரல் வீடியோ

By செய்திப்பிரிவு

ஹாங்சோ: தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சாய் கிஷோர் தேசிய கீதம் இசைக்கும்போது ஆனந்தக் கண்ணீர் வடித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் நேபாள அணியை எதிர்கொண்ட இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. நீண்டகாலமாக இந்திய அணியில் இடம்பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர், இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக முதல் முறையாக அறிமுகமானார்.

இதனால் போட்டிக்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்படும்போது ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவை டேக் செய்து இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடின உழைப்பை வெளிப்படுத்தும் மக்களுக்கான பலனை கொடுப்பதற்கான வழிகளை கடவுள் பார்த்துக்கொள்வார்.

டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த சாய் கிஷோர் ஒரு சூப்பர் ஸ்டார். அவரை பற்றி நினைக்கும் என்னால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாது. இன்று காலை எழுந்ததும், ஆடும் லெவனில் சாய் கிஷோரின் பெயரைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டேன். எப்போதும் என் பட்டியலில் சாய்க்கு முதலிடமே.

தனது பேட்டிங்கை மேம்படுத்திய விதமே அவரைப் பற்றி அனைத்தையும் நமக்கு சொல்லும். திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சாய் இந்திய அணியில் இடம்பெற, எந்த வடிவத்திலும் விளையாடும் வகையில் தன்னை தானே மாற்றினார். இப்படி இன்னும் அவரைப் பற்றி என்னால் பேசிக்கொண்டே இருக்க முடியும். ஆனால் இப்போதைக்கு இது போதும். இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சாய் இடம்பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இனி அவருக்கான இடத்தை யாராலும் பறிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய சாய் கிஷோர் 4 ஓவர்கள் பந்துவீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE