Asian Games 2023 | பந்துவீச்சிலும் ஜொலித்த இந்தியா - நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி

By செய்திப்பிரிவு

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. நேபாள அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

203 ரன்கள் இலக்கை துரத்திய நேபாள அணியில் குஷல் புர்டெல் 28 ரன்களும், குஷல் மல்லா 29 ரன்களும், திபேந்திர சிங் 32 ரன்களும், சந்தீப் ஜோரா 29 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக ஆடவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்திய அணி தரப்பில் அவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். காலிறுதி ஆட்டங்கள் இன்று முதல் தொடங்கிய நிலையில் முதல் காலிறுதியில் விளையாடிய இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

இந்திய அணியின் இன்னிங்ஸ்: முன்னதாக, நேபாள அணிக்கு எதிராக 202 ரன்கள் குவித்திருந்தது இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் பதிவு செய்தார். இறுதி ஓவர்களில் வழக்கம்போல அதிரடியில் மிரட்டினார் ரிங்கு சிங். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்ய, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஜெய்ஸ்வால், அதிரடி ஆட்டத்தால் மிரட்டினார். மறுமுனையில் ருதுராஜ், 25 ரன்களில் வெளியேறினார். திலக் வர்மா மற்றும் ஜிதேஷ் சர்மா, ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். பின்னர் துபே பேட் செய்ய வந்தார். ஜெய்ஸ்வால், 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது ஆட்டத்தில் அடங்கும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் இது. பின்னர் வந்த ரிங்கு சிங், 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசினார். துபே, 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE