Asian Games 2023 | பருல் சவுத்ரி, அன்சி வெள்ளி வென்று அசத்தல்

By செய்திப்பிரிவு

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் பருல் சவுத்ரியும் நீளம் தாண்டுதலில் அன்சி சோஜனும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் பருல் சவுத்ரி பந்தய தூரத்தை 9:27.63 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான பிரீத்தி பந்தய தூரத்தை 9:43.32 விநாடிகளில் எட்டிப்பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். பக்ரைனின் வின்ஃப்ரெட் முட்டில் யாவி (9:18.28) தங்கப் பதக்கம் வென்றார்.

ஜோஷ்னா தோல்வி: ஸ்குவாஷ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 70-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், 158-ம் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் ஹியோ மிங்யோங்கிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான தன்வி கன்னா 3-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் அரிச்சயா சுஜித்தை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் 3-0 என்ற செட் கணக்கில் குவைத்தின் அமர் அல்தமியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சுதிர்தா-அய்ஹிகா: மகளிருக்கான டேபிள் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, அய்ஹிகா முகர்ஜி ஜோடி அரை இறுதி சுற்றில் 3-4 என்ற கணக்கில் வட கொரியாவின் சுயோங் சா, சுக்யோங் பாக் ஜோடியிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது.

பி.டி.உஷா சாதனை சமன்: மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 55.42 விநாடிகளில் கடந்து தனது ஹீட்டில் முதலிடம் பிடித்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

அதேவேளையில் தேசிய சாதனையையும் சமன் செய்தார். இதற்கு முன்னர் பி.டி.உஷா 1984-ம் ஆண்டு 55.42 விநாடிகளில் கடந்திருந்தார். வித்யா ராம்ராஜ் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் அன்சி சோஜன் எடப்பள்ளி 6.63 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் ஜியாங் 6.73 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கமும், ஹாங்காங்கின் யு கா யன் (6.50 மீட்டர்) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE