Asian Games 2023: IND vs NEP | ஜெய்ஸ்வால் சதம்: இந்தியா 202 ரன்கள் குவிப்பு!

By செய்திப்பிரிவு

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டில் நேபாள அணிக்கு எதிராக 202 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் பதிவு செய்தார். இறுதி ஓவர்களில் வழக்கம்போல அதிரடியில் மிரட்டினார் ரிங்கு சிங்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஜெய்ஸ்வால், அதிரடி ஆட்டத்தால் மிரட்டினார். மறுமுனையில் ருதுராஜ், 25 ரன்களில் வெளியேறினார். திலக் வர்மா மற்றும் ஜிதேஷ் சர்மா, ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். பின்னர் துபே பேட் செய்ய வந்தார்.

ஜெய்ஸ்வால், 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது ஆட்டத்தில் அடங்கும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் இது.

பின்னர் வந்த ரிங்கு சிங், 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசினார். துபே, 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது இந்தியா. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நேபாளம் விரட்டி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE