Asian Games 2023 | இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம்

By செய்திப்பிரிவு

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற 8-ம் நாள் போட்டியின் போது 3 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே, 8 நிமிடம் 19.50 விநாடிகளில் முதலாவதாக வந்து புதிய ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார்.

இதற்கு முன்பு 2018-ல் ஈரான் வீரர் ஹொசைன் கெய்ஹனி 8 நிமிடங்கள் 22.79 விநாடிகளில் ஓடியதே ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனையாக இருந்தது. அதை தற்போது அவினாஷ் முறியடித்துள்ளார். மேலும், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவினாஷ் பெற்றுள்ளார்.

ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் 20.36 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து தங்கம் வென்றார். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தஜிந், தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் அணி துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான், கியானன் செனாய், ஜொராவர் சிங் சாந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 361 புள்ளிகளைக் குவித்து தங்கம் வென்றது.

துப்பாக்கிச் சுடுதல் மகளிர் அணி டிராப் பிரிவில் மணீஷ் கீர், பிரீத்தி ரஜாக், ராஜேஸ்வரி குமாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 337 புள்ளிகள் குவித்து 2-ம் இடம் பிடித்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 357 புள்ளிகள் குவித்த சீன அணிக்கு தங்கமும், 336 புள்ளிகள் குவித்த கஜகஸ்தான் வீராங்கனைகளுக்கு வெண்கலமும் கிடைத்தது.

கோல்ஃப்: மகளிர் கோல்ஃப் பிரிவில் இந்திய வீராங்கனை ஆதித்தி அசோக் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முதல் இடத்தை தாய்லாந்து வீராங்கனை அர்ப்பிசயா யூபோலும், தென்கொரிய வீராங்கனை ஹுயுன்ஜோ யூ 3-வது இடமும் பிடித்தனர்.

1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி: ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் அஜய்குமார் சரோஜ் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஜின்சன் ஜான்சன் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஜோதி யார்ராஜிக்கு வெள்ளி: மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி 3-வதாக (12.91 விநாடி) வந்து வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதே பிரிவில் பங்கேற்ற சீன வீராங்கனை யானி வூ (2-வது இடம்) தகுதியிழப்பு செய்யப்பட்டதால் ஜோதி யார்ராஜி இரண்டாவதாக வந்ததாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதக்கம், வெள்ளிப் பதக்கமாக மாற்றப்பட்டது.

முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளி: ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 2-வது இடம் (8.19 மீட்டர் தூரம்) பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலமும் (58.62 மீட்டர் தூரம்), மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அகாசரா வெண்கலமும் வென்றனர். மகளிர் 50 கிலோ குத்துச்சண்டை அரை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் 1-2 என்ற கணக்கில் தாய்லாந்தின் ரகாஸ்த் சுத்தாமத்திடம் தோல்வி கண்டார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துடன் திரும்பினார்.

பதக்கப் பட்டியலில் 4-வது இடம்: 8-ம் நாள் போட்டிகளின் முடிவில் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனாவும், 2-வது இடத்தில் ஜப்பானும், 3-வது
இடத்தில் கொரியாவும் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்