ODI WC 2023 | மாட்டிறைச்சி உணவு வகைகளுக்கு 'நோ' அனுமதி - விமர்சித்த பாகிஸ்தான் ஊடகங்கள்

By செய்திப்பிரிவு

மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து மாட்டிறைச்சி தடையை பாகிஸ்தான் ஊடகங்கள் விமர்சித்துள்ளன. உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி உட்பட பல அணிகளுக்கும் வழங்கப்படும் உணவு விவரங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, போட்டி நடைபெறும் 10 மைதானங்களிலும் மாட்டிறைச்சி உணவுக்கு அனுமதி கிடையாது. இதனால், பாகிஸ்தான் அணி மாட்டிறைச்சிக்கு பதிலாக சரிசம ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளும் வகையில் தங்களின் உணவு டயட் ஷீட்டை மாற்றியுள்ளது.

அக்டோபர் 10 வரை ஹைதராபாத்தில் தங்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு பயிற்சி இல்லாத நாட்களில் ஹைதராபாத் பிரியாணியும், பயிற்சி மற்றும் போட்டி நடைபெறும் நாட்களில் இளம் செம்பறி ஆட்டுக்கறியில் செய்யப்பட்ட சாப்ஸ் உடன் பட்டர் சிக்கன், கிரில் செய்யப்பட்ட மீன் ஆகியவை முக்கிய உணவாக இடம்பெற்றுள்ளன. அதேநேரம், வேகவைக்கப்பட்ட பாஸ்மதி சாதம், ஸ்பெகதி (Spaghetti), வெஜ் புலாவ் ஆகிய உணவு வகைகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளது பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தது. தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி அன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2-வது பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. அக்டோபர் 6-ம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் விளையாடுகிறது. இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்டோபர் 14-ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE