10 ஆண்டுகளாக இந்திய மண்ணில் அரைசதம் காணாத ஜடேஜா உலகக் கோப்பையில் சாதிப்பாரா?

By ஆர்.முத்துக்குமார்

உலகக் கோப்பைக்குச் செல்வதற்கு முன்னால் இந்திய அணி தன் பிரச்சினைகளை ஓரளவுக்குக் களைந்துள்ளது என்றே கூற வேண்டும். ஓப்பனிங்கில் ரோகித், கில் நல்ல பார்மில் இருக்கின்றனர். மிடில் ஆர்டரில் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூரியகுமார் வலுவாக உள்ளனர். ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் வீச முடியவில்லை எனில் இவரா, ஜடேஜாவா என்பதில் தேர்வுப்பிரச்ச்னை உள்ளது. ஆனால் ஜடேஜா பிரச்சினை என்னவெனில் இந்திய மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் ஜடேஜா ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை என்பதுதான் பலரும் அறியாத புள்ளி விவரமாகும்.

அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஜடேஜாவின் ஆட்டம் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஷாட்களில் பவர் இல்லை. ஃபுல் ஷாட் ஆடினால் உடல் முழுதையும் திருப்பி ததிங்கிணத்தோம் போடுகிறார். பந்தை பீல்டர்களின் கைகளுக்கு நேராக அடிக்கிறார். அன்று 36 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ஆனால் ஆட்டத்தில் இலக்கை விரட்டுவதற்கான எந்த ஒரு தீவிரமும் இல்லை... இல்லவே இல்லை.

அணியில் அவரது இடம் ஸ்திரமானது என்ற உத்தரவாதம் அவரது ஆட்டத்தை கெடுத்து விட்டதா என்று தெரியவில்லை. ஆகவே நம்பர் 8-ல் பேட்டிங் வீரர் தேவை என்று அபத்தமாக இந்திய அணி ஷர்துல் தாக்கூரை அணியில் வைத்துக் கொள்வது விமர்சனத்துக்குரியது போல் நம்பர் 7-ல் ஜடேஜாவை நிரந்தரமாக நம்புவதும் தகாது.

2023-ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 12 இன்னிங்ஸ்களை ஜடேஜா ஆடியுள்ளார். 189 ரன்களை மட்டுமே 27 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் மிக மோசமாக உள்ளது. இந்த 12 இன்னிங்ஸ்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 64 தான். புதனன்று ஆடிய இன்னிங்ஸ் நீங்கலாக, ஜடேஜா இந்த ஆண்டு ஒரு சிக்சரைக்கூட அடிக்கவில்லை என்ற புள்ளி விவரமும் இந்திய அணிக்குக் கவலையளிக்க வேண்டும். ஆனால், அஸ்வினைத் தேர்வு செய்ய சோழியெல்லாம் உருட்டி ஜாதகமெல்லாம் பார்க்கும் இந்திய அணித்தேர்வு குழு ஜடேஜாவின் பார்ம் இன்மைப் பற்றி வாயைத் திறக்காமல் இருப்பது மிகவும் சமீபத்திய மவுனம் என்பதை கவனமாக யோசிக்க வேண்டும். 2019 உலகக்கோப்பை முதல் 2020 வரை ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட் 106 ஆக இருந்தது.

குறைந்தது 260 பந்துகளையாவது சந்தித்த டெஸ்ட் விளையாடும் அணிகளின் வீரர்களில் ஜடேஜாவின் ஒருநாள் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக உள்ளது . 7ம் நிலையில் குறைந்தது 250 பந்துகளையாவது ஆடிய வீரர்களிடையே ஜடேஜாவின் ஸ்ட்ரைக் ரேட் 63 மட்டுமே என்கிறது விஸ்டன் புள்ளி விவரம்.

இந்தியாவின் முதல் 15 ஓவர் ஸ்ட்ரைக் ரேட் இந்த ஆண்டு 96.41. இது இரண்டாவது சிறந்த ஸ்ட்ரைக் ரேட். இதில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்துள்ளது. ஓவர்கள் 16-35 இடையே இந்திய அணியின் ஸ்ட்ரைக் ரேட் 88.11. இது ஏன் எனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய அணியின் சமீபத்திய வழியல்தான். 36-40 ஓவர்கள் வரை ஸ்ட்ரைக் ரேட் 113.92 என்கிறது விஸ்டன் புள்ளி விவரம்.

ஆனால் ஜடேஜா இந்த ஓவர்களில் பேட் செய்தால் ஸ்ட்ரைக் ரேட் மந்தமடைகிறது. ஜடேஜாவின் டெத் ஓவர் ஸ்ட்ரைக் ரேட் 74.3. 53 பந்துகளை டாட் பால்களாக ஆக்கி விடுகிறார். இதனால் ஸ்ட்ரைக் ரேட் 65 ஆகக் குறைகிறது. இப்படி 5 இன்னிங்ஸ்களில் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஜடேஜாவின் பந்து வீச்சு சிக்கனமாக உள்ளது, பீல்டிங் எப்போதும் போல் பொறிபறக்கிறது, ஆனால் பேட்டிங்கில் இவரை நம்பி 7வது இடத்தை ஒப்படைத்தால் சிக்கல்தான் என்று இப்போது தோன்றுகிறது, இந்திய அணி நிர்வாகம் யோசிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்