இந்தியாவை ‘எதிரி நாடு’ என விமர்சித்த பாக்., கிரிக்கெட் வாரிய தலைவர்: நெட்டிசன்கள் எதிர்ப்பால் கருத்து வாபஸ்

By செய்திப்பிரிவு

லாகூர்: இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வகையில் கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் அணி, ஹைதராபாத் வந்தது. அந்த அணிக்கு விமான நிலையத்தில் உள்ளூர் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். இந்தச் சூழலில் அன்றைய தினமே இந்தியாவை எதிரி நாடு என மறைமுகமாக சாடி இருந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரப்.

அவரது கருத்துக்கு இரு நாடுகளைச் சேர்ந்த நெட்டிசன்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இதனை பாகிஸ்தான் அணி, இந்தியா வந்திறங்கிய சில மணி நேரங்களில் அவர் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் அந்தக் கருத்தை அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.

“பாகிஸ்தான் வீரர்களுக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்காக இந்தியர்களுக்கு நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும், பாகிஸ்தானும் களத்தில் விளையாடும்போது சவால் நிறைந்த போட்டியாளர்களாக செயல்படுகின்றனர். எதிரிகளாக அல்ல” என அவர் தெரிவித்துள்ளார். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் லீக் போட்டியில் விளையாடுகின்றன. முன்னதாக, பாகிஸ்தான் அணி, இந்தியா வர விசா கிடைப்பதில் சிக்கல் இருந்ததாக சொல்லப்பட்டது. நேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE